இரு மாவட்ட போலீஸாருக்கு மோதல் ; தி நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் சலசலப்பு

இரு மாவட்ட போலீஸாருக்கு மோதல் ; தி நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் சலசலப்பு
இரு மாவட்ட போலீஸாருக்கு மோதல் ; தி நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் சலசலப்பு

சென்னை தி நகர் கொள்ளை வழக்கில் இரு மாவட்ட போலீசாருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகர் மூசா தெருவில் உத்தம் ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த 21 ஆம் தேதி அதிகாலை ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் தி.நகர் துணை ஆணையர் ஹரிகரன் மேற்பார்வையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சுரேஷ்)                                                                                          ( கங்கா)

சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் 2 கொள்ளையர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் முகக்கவசம் அணிந்து கொள்ளையன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கொள்ளையர்களில் ஒருவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ், என்பதும் மற்றொருவர் கூட்டாளி அப்புனு வெங்கடேசன் என்பதும் தெரியவந்தது. ஆனால் நகைகளுடன் சென்ற கொள்ளையன் முகத்தில் முகக்கவசம் இருந்ததால் நபரை உறுதிசெய்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், அவர் மார்க்கெட் சுரேஷ் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

வெங்கடேஷ் 

கொள்ளையடித்த நகைகளை திருவள்ளூரில் உள்ள தனது காதலி கங்காவிடம் கொடுத்து வைப்பது சுரேஷின் வழக்கம். அந்த வகையில் தி நகரில் கொள்ளையடித்த நகைகளையும் சுரேஷ், கங்காவிடம் கொடுத்துள்ளார். நகைகளை வாங்கிய கங்கா அதில் சிலவற்றை எடுத்து அணிந்து கொண்டு தெருக்களில் சுற்றி வந்துள்ளார். இதனிடையே மாம்பலம் போலீசார் நடத்திக்கொண்டிருந்த விசாரணையில் கங்கா குறித்த துப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து திருவள்ளூருக்கு விரைந்த தனிப்படை கங்காவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தது. இந்நிலையில் கங்காவை பார்க்க சுரேஷ் திருவள்ளூருக்கு சென்றுள்ளார்.

அப்போது கங்கா கைது தொடர்பாக சுரேஷிடம் வினவிய அங்கிருந்த வியாபாரிகள் அவரை தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டு நிகழ்விடத்திற்கு வந்த டிஎஸ்பி துரைப்பாண்டியன் விசாரணை நடத்தினார். அப்போது சுரேஷ் மீது திருவள்ளூரில் கொள்ளை வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த துரைப்பாண்டியன் அவரிடம் விசாரணை நடத்தினார். இதற்கிடையில் கங்கா கொடுத்த தகவலின் படி சுரேஷை தங்களிடம் ஒப்படைக்குமாறு மாம்பல போலீசார், திருவள்ளூர் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால் கங்காவை கைது செய்தபோது மாம்பலம் போலீசார் தங்களுக்கு தகவல் தெரிவிக்காததால், இதற்கு திருவள்ளூர் போலீசார் மறுப்புத் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய திருவள்ளூர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இரு மாவட்ட போலீசாருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை கேள்விப்பட்ட தலைமை இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு தி நகரில் சுரேஷ் கொள்ளையடித்த 21 சவரன் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி நகைகளை மாம்பலம் போலீசாரிடம் திருவள்ளூர் மாவட்ட போலீசார் ஒப்படைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையன் சுரேஷை போலீஸ் காவலில் எடுத்து சென்னை கொண்டுவர மாம்பலம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டில் பதுங்கியிருந்த வெங்கடேசனையும் தற்போது மாம்பலம் போலீசார் கைது செய்தனர். தற்போது வரை மாம்பலம் போலீசார் 1 1/2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

-கார்த்திக் சுப்ரமணியன் ,கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com