Published : 31,Oct 2020 07:48 AM

ஐபிஎல் டூ இந்திய அணி... பலருக்கு வாய்ப்பு.. சிலருக்கு ஏமாற்றம்...!!

Players-performed-well-in-IPL-did-not-get-chance-in-Team-India

ஐபிஎல்-லில் ஜொலித்த வீரர்கள் பலருக்கு இந்திய தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது. இந்நிலையில் எந்தெந்த அணியில் இருந்து எத்தனை வீரர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.

image

இந்திய தேசிய அணி நவம்பர் இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஊரடங்குக்குப் பின் இந்திய அணி மேற்கொள்ளவுள்ள முதல் சுற்றுப்பயணம் இது. 3 ஒரு நாள், 4 டெஸ்ட் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் பல புதிய முகங்கள் முத்திரை பதித்துள்ளதால், இந்திய அணியில் யார் யார் இடம் பிடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் பெற்றிருந்தது. இவ்வாறான சூழலில் கடந்த 27 ஆம் தேதி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 3 வித கிரிக்கெட்டுகளுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

image

குறிப்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூர் அணியைச் சேர்ந்த கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், சிராஜ், நவ்தீப் சைனி மற்றும் சுழற் சூத்திரதாரிகள் சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

டெல்லி அணியைப் பொறுத்தவரையில் இளம் வீரர் பிரித்திவி ஷா, ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவன், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் முகமது ஷமி ஆகியோர் சமரசமின்றி தங்கள் இடத்தை பிடித்துள்ளனர்.

image

ஹைதராபாத் அணியிலிருந்து மணிஷ் பாண்டே மற்றும் வ்ரித்திமான் சஹாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் அடையாளம் காணப்பட்ட நட்சத்திரங்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்தி, சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 3 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸின் அஸ்திரங்களான தீபக் சாஹர், சர்தூல் தாகூர் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் அணியில் இடம் பிடித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து சஞ்சு சாம்சன் மட்டுமே இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். சக வீரரான ராகுல் திவேதியா பேட்டிங், பவுலிங் இரண்டிலும் முத்திரை பதித்துள்ள போதிலும் அவரது காத்திருப்பு தொடர்கிறது.

image

சர்ச்சைகளுக்கு வழி வகுத்துள்ள மும்பை இண்டியன்ஸ் அணியி‌‌‌ன்‌ கேப்டனான ரோகித் சர்மாவே ஆஸ்திரேலிய தொடருக்கான அணிகளில் இடம் பெறவில்லை.‌ அந்த அணியில் இருந்து யார்க்கர் மன்னன் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு குழுவினரின் பார்வையில் முன் வைக்கப்பட்ட காரணிகள் எவை என்பது வெளிப்படையாக தெரியாத சூழலில், ஐபிஎல்லில் ஜொலித்தும் சில வீரர்களுக்கான இந்திய அணி கனவு காத்திருப்பில்‌‌ நீள்கிறது. தங்கள் மனதை வென்ற வீரர்களின் திறமைகள் ஐபிஎல்லுக்குள் மட்டும் அடங்கி விடாமல், இந்திய அணியையும் அலங்கரித்து அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்