ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன? விமர்சகர்கள் கருத்து...!

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன? விமர்சகர்கள் கருத்து...!
ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன? விமர்சகர்கள் கருத்து...!

ரஜினியின் அரசியல் வருகை குறித்து விமர்சகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் நேற்று இரவு முதல் ஒரு கடிதம் பரவி வருகிறது. அதில் ரஜினியின் உடல்நலக் குறைவு குறித்தும், தற்போதைய கொரோனா காலத்தில் ரஜினி மக்களை சந்தித்து அரசியல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், அரசியல் கட்சி தொடங்கும் முன்பே ரஜினி அதனை கைவிட திட்டமிட்டுள்ளது போன்ற கருத்து பரவியது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ரஜினியின் விளக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறுகையில், “27ஆம் தேதியே அந்த அறிக்கை வெளிவந்துவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து எல்லா ஊடகங்களிலும் வெளிவந்து, அனைவரும் படிப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திகொடுத்துவிட்டு, ரஜினி இனிமேல் அரசியலுக்கு வருவது அரிதினும் அரிது என்ற நினைவை உண்டாக்கிவிட்டு மிகவும் தாமதமாக ரஜினி இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார். நிர்வாகிகளோடு ஆலோசித்துவிட்டு அரசியல் நிலைப்பாட்டை எடுப்பேன் என தெரிவிக்கிறார். ஏற்கெனவே அவர் அரசியல் நிலைப்பாட்டை 2017ஆம் ஆண்டே எடுத்துவிட்டார். அரசியலுக்கு வருவேன், கட்சி ஆரம்பிப்பேன் எனத் தெரிவித்தார்.

இப்போது புதிதாக அரசியல் நிலைப்பாடு எடுக்க என்ன இருக்கிறது? இனிமேல் நிலைப்பாடு எடுத்தால் நான் வரவில்லை என்பதாகத்தான் இருக்க முடியும். எனவே அரசியலுக்கு வரமாட்டார் என்ற எண்ணத்தை அனைவரது மத்தியிலும் உண்டுபண்ணவே ரஜினி தெளிவாக பிளான் செய்திருக்கிறார். ரசிகர்களை பக்குவப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை என சொல்லிவிடுவார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என டெல்லியில் இருந்து பிரஷர் இருந்த மாதிரி சென்னையில் இருந்து வரவேண்டாம் என பிரஷர் வந்துள்ளது என நினைக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் கூறுகையில் “இது ஒரு கொரோனா நோய் காலம். ரஜினிகாந்த் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னமாதிரி. அவர் ஏற்கெனவே அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக சொல்லிவிட்டார். இந்த தமிழ் மண்ணுக்கும், ரசிகர்களுக்கும் நிச்சயம் ஏதாவது செய்யாமல் போகமாட்டார். அவரது வார்த்தைகளில் அவர் மாறமாட்டார். ஆன்மிக அரசியல் அவரது கொள்கை. இறைவன் நிச்சயமாக அவருக்கு உடல்வலிமையை கொடுக்க வேண்டும். அரசியல் மாற்றத்தை ரஜினிகாந்த் உண்டு பண்ணுவார். அவருக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அந்த வாழைப்பழம்தான் இந்த வாழைப்பழம். ஆனால் அந்த வாழைப்பழம் இந்த வாழைப்பழம் இல்லை. அப்படி சொல்றமாதிரிதான் எனக்கு தெரிகிறது. இது எந்த மாதிரியான அணுகுமுறை என புரியவில்லை. அவருடைய பெயரை சொல்லி பொய் அறிக்கையை சிலர் வெளியிட்டால் அதுகுறித்து ரஜினி வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். குழப்பத்திற்கு ரஜினிக்கு இடம் கொடுக்கக் கூடாது.

அழுத்தத்தின் காரணமாகவே ரஜினி கட்சி ஆரம்பிக்க முன்வந்தார். ரஜினிக்கு அரசியல் ஆசையும் கிடையாது. வரவேண்டும் என்ற அவசியமும் கிடையாது. ஆனால் பாஜகவினர் அவருக்கு அழுத்தம் கொடுப்பதாகவே நான் நினைக்கிறேன். எந்த அளவுக்கு தள்ளிப்போட முடியுமோ அந்த அளவிற்கு தள்ளிப்போட நினைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் ஷ்யாம் கூறுகையில், “ஒருவகையில் ரஜினியை பாராட்டலாம். அவரது உடல்நிலைகுறித்து வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். உடல்நிலை ஒத்துழைக்காது என தெரிந்துகொண்டே ஏன் அரசியல் ஆசையை தூண்டிவிட்டார். அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? ஏராளமானோர் ரஜினி என்ற தலைவனை நம்பி தங்களது சொந்த பணத்தை செலவு செய்துள்ளார்கள். ஆசையை தூண்டி தனது திரைப்பட வியாபாரத்துக்கு அவர் பயன்படுத்திக்கொண்டார். கொரோனாவுக்கு பயப்படாமல் அனைத்து அரசியல் கட்சியினரும் மக்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் இவருக்கு மக்களை சந்திக்கவே கொரோனா பயம் என்கிறார்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “கட்சி ஆரம்பிப்பதும், வேண்டாம் என முடிவு செய்வதும் ரஜினி தனிப்பட்ட உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. இதில் அதிமுக கருத்து சொல்ல ஒன்றுமில்லை” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com