[X] Close

மரத்தை வேறு இடத்தில் நடும் நல்உள்ளங்களா நீங்கள்?: இதனை கவனத்தில் கொள்ளுங்கள்..!

சிறப்புச் செய்திகள்

The-empathy-of-the-men-who-planted-the-tree-elsewhere--What-are-the-things-to-keep-in-mind-

சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவும், மனிதர்களின் தனிப்பட்ட தேவைக்காகவும் சாலையோரமாக நின்று கொண்டிருக்கும் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் கேட்பாரற்று கிடக்கும் இது போன்ற மரங்கள் தற்போது சில நல் உள்ளங்களினால் அங்கிருந்து வேறோரு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வளர்க்கப்படுகின்றன. ஆனால் இது போன்று வேறு இடத்திற்கு மாற்றப்படும் மரங்கள் முன்பு இருந்த அதே வளர்ச்சியை பெறுகின்றனவா, அதன் நிலை எவ்வாறு இருக்கும் என்ற சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.


Advertisement

மோகன் - சுற்றுச்சூழல் ஆர்வலர்

இவ்வாறு வேறு இடத்திற்கு மாற்றப்படும் மரங்கள் முந்தைய அளவிலான அதே வளர்ச்சியை பெறுவதில்லை. பல வருடங்களாக பூமியில் இருக்கும் மரங்கள், தனக்கானச் சத்தை பெற வேர்களை மிக நீண்ட பாதையில் அமைத்திருக்கும். அதன் வழியாக தனக்கான முழுமையான சத்தை அது எடுத்துக்கொள்ளும்.


Advertisement

ஆனால் ஒரு இடத்தில் இருந்து மரத்தை வெட்டி எடுக்கும் நபர்கள் அதனது அனைத்து வேர்களை வெட்டிவிட்டு இன்னொரு இடத்தில் நடுகின்றனர். இதனால் அம்மரத்திற்கு தேவையான முழுமையானச் சத்தை மரத்தால் பெற முடியாமல் போகிறது. இதனால் மரங்கள் மிக எளிதில் பட்டுப்போய்விடுகின்றன.

image

அதே போல நீண்டகாலமாக பூமியில் இருக்கும் மரங்களில் இயல்பாகவே சில சத்துக்கள் இருக்கும். அதனால் மாற்று இடத்தில் நடப்படும் மரங்கள் சிறிது காலம் அந்த சத்துக்களை வைத்து உயிர்வாழும். அதைவைத்து சிலர் மரம் நன்றாக வளர ஆரம்பித்து விட்டது எனக் கருதுகின்றனர். ஆனால் அதன் உண்மையான வளர்ச்சி 6 மாதத்திற்கு பின்னரே தெரியும்.


Advertisement

அதேபோல இவ்வகையான மரங்கள் பலத்தக் காற்று வீசும்போது சரிந்து விழும் சாத்தியக்கூறுகளும் உள்ளது. மரங்கள் வெட்டப்படும் போது மரங்கள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. அதில் வாழ்ந்த பறவைகள், நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகிறது. இந்த நுண்ணுயிரிகள் அழிப்பானது தண்ணீர் உருவாக்க சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் இங்கு மரங்களின் மீதான மனிதர்களின் பச்சாதாபம் வரவேற்கப்பட்டாலும், மரத்தை வெட்டுவதற்கான மாற்றுத் தீர்வாக இதனை அணுக முடியாது.

image

டாக்டர் எம். குணசேகரன்

மரத்தை வெட்டுவதற்கான மாற்றுத்தீர்வாக இதனை பார்க்க முடியாது. உலகில் பல இடங்களில் சாலை விரிவாக்கப் பணிக்கான சாலைகளை மரங்களுக்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்படுகின்றன. ஆனால் இங்கு, இது குறித்த விழிப்புணர்வு சுற்றுசூழல் ஆர்வலர்கள் மூலம் கொடுக்கப்பட்டாலும் அது அரசின் காதுகளுக்கு கேட்பதில்லை.

மரங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்யும்போது, மரத்தின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் அதில் வாழும் பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் தனது வாழ்வாதாரத்தை இழக்கும். காரணம் அவைகளின் ஒட்டுமொத்த தேவைகளின் இருப்பிடமாக மரம் இருந்திருக்கும். ஆகையால் முடிந்த வரை மரத்தை வெட்டாமல் இருக்க வேண்டும்.

image

வேறு வழியில்லாமல் மரத்தை வெட்டி மாற்றம் செய்ய நேர்ந்தால் அவர்கள் கீழ்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. மரத்தின் வேர்களை முடிந்த வரையில் வெட்டாமல் எடுத்துக்கொள்வது.

2. மரத்தின் வேர்களில் இருக்கும் மண்ணை எக்காரணத்திற் கொண்டும் அகற்றக்கூடாது. அந்த மண் பூமியின் எல்லா திசைகளிலும் வேர்கள் படர உறுதுணையாக இருப்பவை.

3. மரத்தை நடும் போது வேர்களைச் சுற்றி வைக்கோல் வைக்கலாம்.

image

4. வேரில் உள்ள மணல் உருண்டையை சணல் பையால் போர்த்தி நடவேண்டும்.

5. குறைந்தது 2 வருடமாவது அதன் வேர்களில் ஈரத்தன்மை தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

6. மரம் தன் காலால் ஊன்றி நிற்கும் வரை, அவை மரத்தின் நிழலில் இருப்பது நல்லது.

 

-கல்யாணி பாண்டியன் 

 

 

 

 


Advertisement

Advertisement
[X] Close