கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் தென்படுகிறதா? உணவே சிறந்த மருந்துதான்!!

கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் தென்படுகிறதா? உணவே சிறந்த மருந்துதான்!!
கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் தென்படுகிறதா? உணவே சிறந்த மருந்துதான்!!

10 ஆண்டுகளுக்கு முன்பு 40 வயதைத் தாண்டியவர்கள்தான் மூட்டுவலிக்கிறது, கால் வலிக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் இப்போது 30 வயதைத் தொட்டாலே கை வலிக்கிறது, கால் வலிக்கிறது, முதுகு வலிக்கிறது என்று சொல்லுகிறவர்கள் அதிகரித்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடுதான்.

உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களில் ஒன்று கால்சியம். எலும்பு வளர்ச்சிக்கும், உறுதிக்கும் முக்கியமானது. நம் உடலின் 99% கால்சியம் எலும்பு மற்றும் பற்களில்தான் செறிந்திருக்கிறது. உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், தசைகளின் இயக்கத்திற்கும், இதய துடிப்பு சீராக இருக்கவும் கால்சியம் அவசியம் தேவை.

ஆனால் தினமும் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக கால்சியத்தை இழந்துகொண்டிருக்கிறோம். எனவே அதற்கு ஈடாக கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது அவசியம். 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 1000மில்லிகிராமும், 50 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1200மில்லிகிராமும், 70 வயதுக்குக் கீழ் உள்ள ஆணகளுக்கு 1000 மில்லிகிராமும், 71 வயதுக்கு அதிகமான ஆண்களுக்கு 1200 மில்லி கிராம் கால்சியமும் தேவைப்படுகிறது.

கால்சியம் குறைபாட்டை ஹைபோகால்சீமியா என்று குறிப்பிடுவர். இதன் அறிகுறிகள்

  • குழப்பம் மற்றும் ஞாபகமறதி
  • தசைப்பிடிப்பு
  • கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை
  • மன அழுத்தம்
  • பலவீனமான நகங்கள்
  • பற்கூச்சம்
  • எலும்புகளில் வலி மற்றும் தேய்மானம்

பால் மற்றும் பால் பொருட்கள்
கால்சியம் குறைபாடு என்றாலே அனைவரும் பரிந்துரைப்பது பால்தான். குறிப்பாக பெண்கள் அதிகம் பால் மற்றும் பால் பொருட்கள் சேர்த்துக்கொண்டால் கால்சியத்துடன் உடலுக்குத் தேவையான புரதச்சத்தும் கிடைக்கும். சீஸ் அதிகம் சேர்த்துகொள்வதும் கால்சியத்தை அதிகரிக்கும்.

பாதாம்
நிறையப்பேருக்கு பால் மற்றும் பால் பொருட்கள் பிடிக்காது. எனவே அவர்கள் தினமும் 2-5 பாதாம் பருப்பை சாப்பிட கால்சியம் அதிகரிக்கும். பாதாமில் வைட்டமின் பி2 மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்திருப்பதால் தசைகளையும் வலுவாக்கும்.

மீன்
சால்மன் மீன், மத்தி மீன் போன்றவற்றில் ஒமேகா 3 அதிகமுள்ளது. இது கண்கள் ஆரோக்யத்தைக் காப்பதோடு எலும்பின் அடர்த்தியையும் அதிகரிக்கும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு
பீன்ஸ் மற்றும் பருப்புகளில் நார்ச்சத்து, புரதங்கள் நிறைந்திருக்கிறது. நம் உணவுகளில் அடிக்கடி காய்கறிகள் நிறைந்த சாம்பார் இடம்பெறுவதால் தினமும் இதுபோன்று ஒருவழியில் நம் உடலில் கால்சியம் சேர்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அத்திப்பழம்
உலர் அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும், கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. தினமும் காலை 2-3 அத்திப்பழம் சேர்த்துக்கொள்வது நல்லது.

பழங்கள், பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள

கீரைகள் மற்றும் காய்கறிகளில் அனைத்துவிதமான வைட்டமின்கள் மற்றும் கால்சியம் உட்பட அனைத்துச் சத்துகளும் நிறைந்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே தினமும் சரிவிகித உணவு உட்கொள்வது அவசியம்.ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழவகைகளிலும் கால்சியம் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com