கொல்கத்தாவை ஊதித்தள்ளிய மும்பை : மேட்ச் ரிவ்யூ..!

கொல்கத்தாவை ஊதித்தள்ளிய மும்பை : மேட்ச் ரிவ்யூ..!
கொல்கத்தாவை ஊதித்தள்ளிய மும்பை : மேட்ச் ரிவ்யூ..!

ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மார்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய திரிபாதி மற்றும் சுப்மான் கில் ஆகியோர் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 7 (9) ரன்களில் திரிபாதி விக்கெட்டை இழக்க, சிறிது நேரம் நிலைத்து நின்ற சுப்மான் கில் 21 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிதிஷ் ரானா மற்றும் தினேஷ் கார்த்திக் சொற்ப ரன்களில் அவுட் ஆக, ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரியை விளாசிய ரஸல் 12 (9) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதனால் 61 ரன்களுக்கு கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் இயான் மார்கன் மற்றும் பட் கம்மின்ஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய பட் கம்மின்ஸ் அரை சதம் கடந்தார். மறுபுறம் 29 பந்துகளை சந்தித்த மார்கன் 39 ரன்களை சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே நிலைத்து ஆடாதது மைனஸாக அமைந்தது. கடைசி நேரத்தில் மார்கன் மற்றும் பட் கம்மின்ஸ் கொடுத்த இணையற்ற பார்ட்னர்ஷிப் கொல்கத்தா அணிக்கு பெரும் பலமாக அமைந்தது. மும்பை அணியில் 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே கொடுத்த ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்த போதும் 51 ரன்களை நேதன் கட்லர் நைல் வாரிக்கொடுத்தது சொதப்பலாக இருந்தது.

149 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கை எதிர்த்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்கமே சிறப்பாக அமைந்தது. ரோகித் ஷர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் குயிண்டான் டி காக் அதிரடி மன்னனாக மாறினார். 36 பந்துகளை சந்தித்த ரோகித் 35 ரன்களை எடுத்துவிட்டுச் சென்றார். நிலைத்து ஆடிய குயிண்டான் டி காக் அரை சதம் கடந்தார். ஒன் டவுனாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளுக்கு 10 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஹர்திக் பண்ட்யா 11 பந்துகளில் 21 ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காத குயிண்டான் டி காக் 44 பந்துகளில் 77 ரன்களை விளாசினார்.

மும்பை பேட்டிங்கில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களே வெற்றியை எளிதாக்கிவிட்டனர். குயிண்டான் டி காக் பேட்டிங் அபாரமாக இருந்தது. ஒன் டவுனாக களமிறங்கிய சூர்யகுமார் விக்கெட்டை இழந்தாலும், டூ டவுனாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா மேட்ச் ஃபினிஷாக மாறினார். கொல்கத்தா பவுலிங்கில் மும்பை பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் யாரும் பந்துவீசவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாதது மைனஸாக அமைந்தது. சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். மொத்தத்தில் கொல்கத்தாவை ஊதித்தள்ளி மீண்டும் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com