
மருந்தை மாற்றிக் கொடுத்ததால் செக்யூரிட்டி பலியான சம்பவத்தில் மெடிக்கல் ஸ்டோர் அதிபர் கைது செய்யப்பட்டார்.
எர்ணாவூரை சேர்ந்தவர் ராமன் (59). தனியார் நிறுவன செக்யூரிட்டி. ரத்தகொதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு டாக்டர், மாத்திரை எழுதி கொடுத்தார். அதை திருவொற்றியூரில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் கொடுத்து சில நாட்களுக்கு முன் மாத்திரை வாங்கினார். ஆனால் மருந்து கடைக்காரர் புற்றுநோய் மாத்திரைகளை கொடுத்தாகக் கூறப்படுகிறது. கடந்த 6 நாட்களாக அந்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார் ராமன். இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராமன் இறந்தார்.
இறப்பில் சந்தேகம் அடைந்த அவர் மகன் சக்திவேல், தந்தை சாப்பிட்ட மாத்திரை குறித்து விசாரித்தபோது தவறான மாத்திரையை உட்கொண்டதுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மாத்திரையை மாற்றி உட்கொண்டதால் தான் ராமன் உயிரிழந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து மருந்து கடை ஓனர் பலவேசம் (58) பணியாளர் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.