[X] Close

மத நல்லிணக்கத்தை காட்டிய அழகான விளம்பரத்தை தனிஷ்க் நீக்கியிருக்கக்கூடாது - ஜோதிமணி எம்.பி்

சிறப்புச் செய்திகள்

jothimani-mp-interview

சமீபத்தில் வெளியான தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரம் லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கிறது என்று எதிர்ப்புகள் கிளம்பவே, அந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றது டாடா நிறுவனம். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் பேசினோம்,


Advertisement

     “தனிஷ்க் விளம்பரம் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரம். ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் யார் யாரை திருமணம் செய்துகொள்வார்கள் என்பதை, அந்தந்த குடும்பத்தின் சம்மந்தப்பட்ட நபர்கள் முடிவு செய்யவேண்டிய விஷயமே தவிர, அரசியல் கட்சிகள் அல்ல. மத நல்லிணக்கத்தையும் சமூகச் சூழலையும் வலியுறுத்தும் அழகான விளம்பரத்தை டாடா நிறுவனம் நீக்கியிருக்கக்கூடாது. டாடா போன்ற ஒரு பெரிய நிறுவனத்தையே பாஜக மிரட்டி பணிய வைக்கிறது என்றால், ஏழை எளிய மக்களை என்ன பாடுபடுத்துவார்கள்?

image


Advertisement

 கொரோனாவால் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களை வறுமை வாட்டுகிறது. சீனா இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. வங்கதேசத்தைவிட மோசமான பொருளாதாரமாகிவிட்டோம். இந்தளவுக்கு நாட்டில் பிரச்சனைகள் மக்களை அழுத்திக்கொண்டிருக்கும்போது, ஒரு அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?. இந்த நாட்டிற்கு நல்லக் கல்வி, நிறைவான வேலை வாய்ப்பு, முன்னேறிய பொருளாதரம் தேவை. ஆனால், இவை எதுவுமே இப்போது இல்லை. மக்களிடம் வாங்கும் சக்தியே கிடையாது. குழந்தைக்கு பால் வாங்கக்கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர். காங்கிரஸ் கொண்டுவந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்கூட இல்லையென்றால் மக்கள் பசியில் தவித்து இருப்பார்கள். பாஜகவுக்கு எதுகுறித்தும் கவலை இல்லை.

image

       இந்த சர்ச்சையில் டாடா நிறுவனம் பணிந்திருக்கத் தேவையில்லை. டாடா மாதிரி ஒரு பெரிய நிறுவனமே, இவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை என்றால், அடுத்தடுத்து எல்லோருடைய உரிமைகளையும் அடித்து நொறுக்கிக்கொண்டே இருப்பார்கள். ஹாத்ராவில் இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார். ஆனால், பாஜக அரசு தொடர்ந்து குற்றவாளிகளை காப்பாற்றி வருகிறது. இதுப்போன்ற பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் எரிந்துகொண்டிருக்கும் சூழலில் பாஜக அரசு தனிஷ்க்கின் விளம்பரத்தை நீக்க வைத்துள்ளது. ஆனால், அவர்கள் நேரடியாக செயல்படவில்லை என்றாலும் மறைமுக எதிர்ப்புகளை காட்டி மிரட்டி பணிய வைத்துள்ளார்கள்.


Advertisement

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் ’என் குழந்தை வெறுப்பு விதைக்கப்பட்டுள்ள நாட்டில் வளர்வதை விரும்பவில்லை. அதனால், வெறுப்பை விதைக்கின்ற தொலைக்காட்சிகளுக்கு நான் நிறுவனத்தின் விளம்பரங்களை கொடுக்கமாட்டேன்’ என்ற நிலைப்பாட்டை துணிச்சலோடு எடுத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அப்படி இருக்கும்போது டாடா மாதிரி ஒரு நிறுவனம் ஏன் பணிய வேண்டும்?

 image

ஆனால், எங்கள் கடையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை முன்னிட்டும் நீக்குகிறோம் என்று கூறியுள்ளதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. குஜராத்தில் தனிஷ்க் கடையின் மேனேஜரை மிரட்டி மன்னிப்பு கடிதம் வாங்கி ஒட்டியுள்ளார்கள். டாடா உலகளவில் மதிக்கப்படும் ஒரு பாரம்பர்யமிக்க தொழில் நிறுவனம். ஆனால், அவர்களாலேயே இந்த அடக்குமுறையை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் நாடு எந்தளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைப் பார்க்கவேண்டும்.

அதுவும், தனிஷ்க்கின் அந்த விளம்பரம் மதமாற்றத்தை வலியுறுத்தவில்லை. அப்படி கட்டாய மதமாற்றம் விளம்பரத்தில் செய்யபட்டது என்றால் அது கண்டிக்கத்தக்கது. ஆனால், விளம்பரத்தில், அந்தப் பெண் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாரோ அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் காட்டப்படுகிறது. இதில், எங்கு மதமாற்றம் வந்தது? எங்கு வலியுறுத்தப்படுகிறது?. பொருளாதார வீழ்ச்சியையும் நாட்டின் பிரச்சனைகளையும் மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, இதுபோன்ற மதவெறியை தொடர்ந்து தூண்டிக்கொண்டு வருகிறது பாஜக” என்று கோபமுடன் பேசுகிறார், ஜோதிமணி .

- வினி சர்பனா


Advertisement

Advertisement
[X] Close