Published : 07,Oct 2020 06:53 PM

பைக்கில் சென்றபோது அறுந்து விழுந்த மின்கம்பி... நிகழ்விடத்திலேயே உயிரிழந்த மாணவர்..!

College-student-killed-in-power-outage-Tragedy-in-Rajapalayam---

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுண்டங்குளத்தில் உயர் மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில், முதுகலை இதழியல் பட்டப் படிப்பு இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர் நிகழ்விடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

image

 ராஜபாளையம் அடுத்த டி.என்.சி. ஆலங்குளம் அருகே உள்ளது சுண்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செந்தட்டிகாளை பாண்டியன். இவரது மூத்த மகன் சரவணன். தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்த இவர், தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, கல்லூரி விடுமுறை என்பதால் தற்போது வீட்டில் இருந்து இணைய வழி மூலம் பயின்று வந்துள்ளார். இன்று காலை கிராமத்தின் அருகே உள்ள டி.என்.சி. முக்கு சாலையில் உள்ள கடைக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி அறுந்து சரவணன் மீது விழுந்துள்ளது. 

image

இதில் சரவணன் மீது மின்சாரம் பாய்ந்ததில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த மின்சார துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் காவல் துறையினர், சரவணனின் உடலை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு கூடியிருந்த சரவணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினருடன், கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இப்பகுதியை சுற்றி உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதால், புதுப்பிக்க கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை மின்சார வாரியத்தினர் அலட்சியமாக இருந்ததாக பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். 

image

மின் உபகரணங்களை சரிவர பராமரிக்காத அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமான நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் காலாவதியான மின் கம்பிகளை மாற்றும் வரை உடலை அவ்விடத்தில் இருந்து அகற்றவும் பொதுமக்கள் மறுத்து விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், சேதமான நிலையில் உள்ள மின் உபகரணங்களை புதுப்பிக்க மின்சார துறையினருக்கு பரிந்துரை செய்யப்படும் என காவல் துறையினர் அளித்த உறுதியை அடுத்து பொது மக்கள் உடலை எடுத்து செல்ல சம்மதம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சரவணனின் உடலை கைப்பற்றிய ஆலங்குளம் காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கம்பி அறுந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் சுண்டங்குளத்தை சுற்றி உள்ள சங்கரமூர்த்திபட்டி, ஆலங்குளம், டி.கரிசல் குளம், லட்சுமியாபுரம், கம்மாபட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்