
பாகுபலி படத்துக்கு அடுத்ததாக ராஜமௌலி இயக்கம் ‘ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
‘பாகுபலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும், 'ஆர்.ஆர்.ஆர்' என்ற 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யாவின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள்.
அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.
பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள்.
இதற்கிடையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாதாப்பூரில் உள்ள ராஜமெளலி மகனின் ஹோட்டலில் படக்குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா பாதுகாப்பு வளையத்தை மீறி வெளி நபர்களை சந்திக்க படக்குழுவினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.