[X] Close

வலுவான நிலையில் இந்தியாவும், சீனாவும்..! பிரச்னைகளின் பின்னணி?

India---China-problems-arise

சிக்கிம் அருகே இந்திய சீன எல்லையில் நடக்கும் பிரச்னைகளின் பின்னணி என்ன? டோக்லம் பீடபூமிக்கு உரிமை கோருவது யார்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.


Advertisement

இந்தியாவும் சீனாவும் சுமார் 3,500 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த எல்லைப் பகுதி இரு நாடுகளுக்கும் இடையே தொல்லையாக இருந்து வருகிறது என்பதற்குச் சான்றாக அமைந்தது 1962 ஆம் ஆண்டு நடந்த போர். அப்போதிருந்து இன்றுவரைக்கும் ஏதோ ஒரு வகையில் அவ்வப்போது எல்லைப் பிரச்னைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அக்சாய் சின், அருணாசலப் பிரதேசம், சிக்கிம் என மூன்று இடங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றன. அப்படியொரு பிரச்னைதான் தற்போது டோக்லம் பீடபூமி தொடர்பாகவும் எழுந்திருக்கிறது. இந்த பீடபூமி வழியாக சீனா சாலை அமைக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு முயற்சி செய்தபோது, இந்தியா அதை எதிர்த்தது. இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் மற்றும் சீனா ஆகியவை சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது டோக்லம் பீடபூமி. உண்மையில் இந்தச் சாலை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடியான மோதல் இல்லை. தொடர்புடைய பகுதி தங்களுடையது என்று இந்தியா கூறவும் இல்லை. மாறாக அந்தப் பகுதியை தன்னுடையது என பூடான் வாதிட்டு வருகிறது. அதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. இந்த ஆதரவுக்குப் பின்னணியில் இந்தியாவுக்கு உத்திசார்ந்த ஒரு முக்கியத்துவமும் இருக்கிறது.


Advertisement

ஏனெனில், டோக்லம் பீடபூமியில் சீனா சாலை அமைக்கும் பகுதி, இந்தியாவின் கோழிக் கழுத்து என்று அழைக்கப்படும் இந்தியாவின் பெரு நிலப்பரப்பையும், வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கிறது. சீனா சாலை அமைத்துவிட்டால், இந்தப் பகுதியில் சீனா அணுகுவது மிக எளிதாகிவிடும் என்று இந்தியா கருதுகிறது. இதன் காரணமாகவே, டோக்லம் பீடபூமியில் சாலை அமைப்பதற்கு இந்திய ராணுவம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. சாலைப் பணியாளர்களையும் தடுத்தது.

இதையடுத்து, இந்திய வீரர்களின் பதுங்கு குழிகளை சீனா தாக்கி அழித்தது. தாக்குதல் எதையும் நடத்தவில்லை என்றும் வீரர்கள் மனிதச் சங்கிலி அமைத்து சாலைப் பணியார்களைத் தடுக்க மட்டுமே செய்தார்கள் என்றும் இந்தியத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்தியா விலகிச் செல்லாவிட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என சீனா எச்சரித்துள்ளது. இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிமின் நாதுல்லா கணவாய் வழியாக மானசரோவருக்கு யாத்திரை சென்ற 57 பேர் சீனாவால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற பகுதி என்பதால், சிக்கிமை இந்தியா முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கிறது. ஆனால், சிக்கிம் தன்னுடைய பிராந்தியம் என சீனா கூறி வருகிறது. 1962 ஆம் ஆண்டு நடந்த போரில் ஏற்பட்ட தோல்வியை மறந்துவிடக்கூடாது என்றும் சீண்டுகிறது. 1962 ஆம் ஆண்டு போரின் போது இருந்ததைவிட பல மடங்கு வலிமையடைந்திருக்கிறது சீனா. இந்தியாவுக்கும் இது பொருந்தும். ஆனால் போர் மூள்வதும், பதற்றம் தொடருவதும் இரு நாடுகளிலுமே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close