பெங்களூரு: குடிசைப்பகுதியில் வாழும் பெண்களுக்கு சுயதொழில் கற்றுக்கொடுக்கும் என்.ஜி.ஓ.!

பெங்களூரு: குடிசைப்பகுதியில் வாழும் பெண்களுக்கு சுயதொழில் கற்றுக்கொடுக்கும் என்.ஜி.ஓ.!
பெங்களூரு: குடிசைப்பகுதியில் வாழும்  பெண்களுக்கு சுயதொழில் கற்றுக்கொடுக்கும் என்.ஜி.ஓ.!

முன்பெல்லாம் குடிசைப்பகுதியில் வாழும் பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த வெளியே வேலைக்குச் சென்றார்கள். தற்போது கொரோனாவால் பலரும் வேலை இழந்துவிட்ட நிலையில், குடிசைப்பகுதியில் வாழும் பெண்கள் செய்வதறியாது உள்ளனர். பலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியானது.

இதைத் தடுக்க நினைத்த தி குட் க்வஸ்ட் ஃபவுண்டேஷன் என்ற பெங்களூருவைச் சேர்ந்த என்.ஜி.ஓ அமைப்பு குடிசைப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


பெங்களூரு மிரரில் வெளிவந்த தகவலின்படி, என்.ஜி.ஓவின் முதல் முயற்சியாக வைட்ஃபீல்டு பகுதியின் சதரமங்களாவைச் சேர்ந்த பெண்களுக்கு சுயதொழிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களைத் தைக்கக் கற்றுக்கொடுத்துள்ளது. ஒருநாளில் 25 நாப்கின்களை தைப்பதன்மூலம் ரூ.162 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதுமட்டுமல்லாமல் வேலை நேரத்தில் அந்தப் பெண்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள கேர் சென்டர் ஒன்றையும் தொடங்கியுள்ளது. எனவே பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி இங்கு வேலைசெய்யலாம்.

இதுபற்றி அங்குவேலை செய்யும் மூர்த் சக்ரவர்த்தி என்ற பெண் கூறுகையில், ‘’எனது கணவர் பெயிண்டராக வேலை செய்துவந்தார். கொரோனா காரணமாக அவர் வேலையிழந்துவிட்டார். இப்போது இந்த தொழில் எங்களுக்கு உதவியாக உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

இதுதவிர தனியார் அங்கன்வாடியில் வேலைசெய்து வந்த கவிதா என்ற பெண்ணும் இந்தத் தொழிலை கற்றுக்கொண்டு தினமும் 25க்கும் அதிகமான நாப்கின்களை தைத்து வருகிறார்.

இவ்வாறு தைத்த நாப்கின்களை தெற்கு கர்நாடகாவின் எம்.எம் ஹில்ஸில் உள்ள பழங்குடிப் பெண்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

இதுபற்றி என்.ஜி.ஓவின் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குழுவின் தலைவர் ஃபெல்சி கூறுகையில், ‘’மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து பழங்குடி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாப்கின்களை தயாரித்து வழங்குகிறோம். மேலும் இவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது. இந்த நாப்கின்களை பழங்குடி பெண்களுக்குக் கொடுக்கும்போது அவர்கள் முகங்களில் சிரிப்பை பார்க்கமுடிகிறது. அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும்’’ என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com