Published : 26,Sep 2020 04:01 PM
குழந்தைகளின் உணவுக்காக "ரிஸ்க்" எடுக்கும் அங்கன்வாடி பெண் ! - வைரலாகும் வீடியோ

மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு சீறிப்பாயும் கோதாவரி ஆற்றை துணிச்சலுடன் நீந்திச்சென்று சத்துணவு கொடுக்கும் அங்கன்வாடி பெண் ஊழியரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
You cannot talk about grit. You have to embody it.
— Susanta Nanda IFS (@susantananda3) September 26, 2020
Anganwadi worker Hemlata Sisa wades through Maliguda in monsoon-a tributary of Godavari, to reach her place of work where she is tending to 5 pregnant women, 4 new mothers & 27 per school kids.
Salutations to her spirit? pic.twitter.com/egPDdkXNlI
ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் அதிகம்பேர் வசிக்கிறார்கள். இம்மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் அருகேயுள்ள நெருதுபாலி கிராமம் அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. போக்குவரத்து வசதிகள் உட்பட எந்த வெளிதொடர்பும் இல்லாத கிராமம் இது.
அதனால், அங்குள்ள குழந்தைகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் அரசின் சத்துணவுப் பொருட்களை வழங்க ஒவ்வொரு திங்கள்கிழமையும் அங்கன்வாடி ஊழியர் ஹேமலதா சிசா வந்து செல்கிறார். அடர்ந்த காடு என்பதால் எப்போதும் கோதாவரி ஆற்றில் வெள்ளம்போல் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே செல்கிறது.
சுமார் 1 கிலோமீட்டர் பழங்குடியின ஆண்களின் உதவியோடு இடுப்பில் கயிற்றை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு ஹேமலதா சிசா நீந்திச்செல்கிறார். இப்படி செல்வது ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல. பத்து வருடங்கள். ஆண்களே இதுபோன்ற பணிகளில் வருவதற்கு தயங்குவார்கள். ஆனால், ஹேமலதா துணிச்சலோடு வாரம்தோறும் ஆற்றை நீந்தி அங்கன்வாடி மூலம் மக்கள் பணியாற்றி வருகிறார்.
400 பேர் வரை வசிக்கும், இக்கிராமத்தில் தற்போது 27 அங்கன்வாடி குழந்தைகளும் 5 கர்ப்பிணி பெண்களும், கைக்குழந்தைகளுடன் 4 தாய்களும் இருக்கிறார்கள். இதுகுறித்து ஹேமலதா பேசும்போது,“இக்கிராமத்தின் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தை அடைய ஒரு சாலை உள்ளது. ஆனால், அதற்கு 15 கிலோமீட்டர் செல்லவேண்டும். அதனால், பத்து வருடமாக ஆற்றை கடந்தே செல்கிறேன். ஆற்றில் நீர் குறைந்திருக்கும்போது இடுப்பளவு நீரில் கடந்து செல்வோம். ஆனால், பருவமழை பெய்யும்போதுதான் சிக்கல் ஏற்படும். ஆற்றில் திடீர் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நீந்தி செல்லும்போதே பலர் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
வெள்ளம் இல்லை என்றாலும் மாலை நேரத்தில் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துவிடும். இதனால், இந்தக் கிராமத்திலேயே தங்கவேண்டிய நிலையும் ஏற்படும். பல்வேறு சவால்கள் இருந்தாலும் நமக்காக குழந்தைகள் காத்திருக்கிறார்களே என்று நினைக்கும்போது அனைத்து கஷ்டங்களும் பறந்துபோகும்” என்று கடமையுணர்வோடு பேசும் ஹேமலதா இரண்டு மகள்களைப் பெற்ற தாய் என்பது குறிப்பிடத்தக்கது.