[X] Close

மண்பாண்டத் தொழிலுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம்: வேலூர் இளைஞரின் புதுமை முயற்சி

சிறப்புச் செய்திகள்

Special-Economic-Zone-for-Pottery-Industry--Vellore-Youth-Innovation-Initiative

மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டம் என்று சொல்லலாம். ஆனால் காலவெள்ளத்தில் பித்தளை, அலுமினியம், சில்வர் என உலோகப் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரிக்க மண்பாண்டங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டன. இன்று கிராமப்புறங்களில்கூட மண்பாண்டங்கள் வழக்கொழிந்துவிட்டது. கோயில் திருவிழா, பொங்கல் விழாக்களின்போது மட்டுமே புழங்கும் அரிய பொருளாக அவை உருமாறிவிட்டன.

பாரம்பரியமான மண்பாண்டத் தொழில் ஏன் மீட்கப்படவேண்டும்? எப்படி மீட்பது? இதனால் என்ன பயன்? யார் இதை செய்வது? என்ற ஏராளமான கேள்விகள். தொழில் பயிற்சிகளால் மட்டுமே மண்பாண்டத் தொழிலுக்குப் புத்துயிர் அளிக்கமுடியும். அதற்கான முதல்கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளார் வேலூரைச் சேர்ந்த விஸ்காம் பட்டதாரி இளைஞர் லோகேஷ்.

image


Advertisement

"வேளாண்மை, தேன் எடுத்தல், மீன்பிடித்தல், மண்பாண்டம், பட்டுப்பூச்சி வளர்த்தல் போன்ற மரபுத் தொழில்களுக்கான பட்டயப் படிப்புகளை உருவாக்கவேண்டும். அந்தந்த மாவட்டம் மற்றும் வட்டாரங்களுக்கு ஏற்ற மரபுத் தொழில்களைப் பயிற்றுவிக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள், படித்த இளைஞர்களை அதில் ஈடுபடுத்தலாம். பயிற்சி பெற்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று மற்றவர்களுடன் தொழில் செய்யும் வகையில் நிரந்தர அமைப்பை உருவாக்க வேண்டும். மரபுத் தொழிலை பயிற்றுவிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. அனைத்து மரபுத் தொழில்களுமே ஏதோ ஒரு சமூக அடிப்படையிலான தொழிலாக இருக்கும். குறிப்பாக மண்பாண்டத் தொழிலை குலாலர் என்ற பிரிவினர் செய்துவருகின்றனர். மண்பாண்டத் தொழிலை பிற சமூகத்தினர் கற்பதில் மனத் தடையுள்ளது" என்று பேசத் தொடங்குகிறார் லோகேஷ்.

image

மண்பானை வனையும் லோகேஷ் 

சமூக கட்டமைப்புக்குள் சிக்கியதால்தான் மண்பாண்டத் தொழில் இன்று அழிவின் விளிம்பில் உள்ளதாக கவலைப்படும் லோகேஷ், "பொதுவாக ஒரு கட்டமைப்பில் இருந்து விடுபட்டு நிறுவனமயமாக்கப்பட்டத் தொழில்கள் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளன என்பதே நிதர்சனம். செருப்பு தயாரிப்பதை ஒரு பிரிவினர் மட்டுமே செய்து வந்தனர். ஆனால் பெரும் தனியார் நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மர வேலைப்பாடுகளை தச்சர்கள் செய்துவந்தனர். தற்போது, இன்டீரியர் டிசைன் என வளர்ந்துவருகிறது. மண்பாண்ட தொழிலும் நிறுவனமாக மாற்றப்பட்டால், அனைத்துத் தரப்பு மக்களின் இல்லங்களிலும் மண்பாண்ட பயன்பாட்டை உறுதி செய்யமுடியும்" என்ற கருத்தை முன்வைக்கிறார்.

image

தற்போது மண்பாண்டத் தொழில் கற்றலுக்கான முக்கியத்துவம் அளிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை செய்துவருபர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கமாட்டார்கள். புதிதாக கற்கவும், பயிற்றுவிக்கவும் முறையான கல்வி இல்லை. மண்பாண்டத் தொழில் மூலமாக போதுமான வருவாய் ஈட்ட முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. மனித நாகரிகத்தின் ஆதித்தொழிலாக இருந்த மண்பாண்டம் இன்று அந்திமகாலத்தில் உள்ளது. மண்பாண்டங்களை கையால் தொடும் கடைசித் தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் 

மரபுத் தொழில்களுக்கு பெரிய நிலப்பரப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக மண்பாண்டம் செய்ய களிமண், சவுடு மணல் சேகரித்துவைத்தல், களிமண்ணை சலித்தல், மண்ணை மிதித்து பதப்படுத்துதல், மண்பாண்டங்களை வெயிலில் காயவைத்தல், கடைசியாக சூளையிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு நபருக்கு குறைந்தது 10 சென்ட் நிலமாவது தேவைப்படும். ஒவ்வொரு தனிநபரும் 10 சென்ட் நிலம் வைத்துக்கொண்டு தொழில் தொடங்கும் நிலையில் இல்லை. எனவே மரபுத் தொழில்களுக்கு அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் செயல்பட்டுவருகிறார் லோகேஷ்.

image

பொது இடத்தில் பொருட்களை விற்பனை செய்வது போலவே தயாரிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக மண்பாண்டங்களை சூளையிடுவதற்கு குறிப்பிட்ட நிலம் தேவைப்படும். குடியிருப்புப் பகுதியில் சூளையிடுவதால் உருவாகும் புகை மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும். ஒவ்வொரு தனிநபர்களும் தனி இடம் தேடி அலைவதைவிட பொருளாதார மண்டலத்தில் இருக்கும் இடத்தை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். இங்கு வருபவர்கள் ஒரு மரபுத் தொழிலைக் கற்பது, மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது, சந்தைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வகையிலும் புலமை பெற்றவர்களாக இருப்பர். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கற்றுத்தந்தாலே போதுமானது, அவரே மற்ற உறுப்பினர்களுக்கு தொழிலைக் கற்றுதரமுடியும்.

image

லோகேஷ் 

வேலூர் மாவட்டத்தில் மண்பாண்டத் தொழில் செய்வதற்கான ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் திட்ட அறிக்கையைத் தயார்செய்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வழங்கியுள்ளார் லோகேஷ். " மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகளை அழைத்து வாருங்கள் நிலம் தருகிறோம் என்றார்கள். ஆனால், அச்சங்கம் சென்னையில் பதிவு செய்யப்பட்டது என்பதால் நிலம் பெற இயலாத நிலை. இதனால் நானும், மண்பாண்ட தொழிலை மீட்டுருவாக்கம் செய்ய ஆர்வமுள்ள சில இளைஞர்கள் சேர்ந்து கிராமம் கிராமமாகச் சென்று மண்பாண்டம் செய்பவர்களை ஒன்றிணைத்து வேலூர் மாவட்ட மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம்" என்கிறார்.

image

வேலூரில் 2 ஏக்கர் நிலம் கிடைத்துவிட்டால், மண்பாண்டத் தொழிலுக்கான இலவச பயிற்சி பள்ளி, மின்சூளை இயந்திரம், மண் பிசையும் இயந்திரம், மின் மோட்டார் சக்கரங்கள் அமைக்கப்படும். மக்களின் கவனம் ஈர்க்கும்வகையில் உலகத்தின் மிகப்பெரிய 20 அடி உயரத்துக்கு களிமண் பானை உருவாக்கி கின்னஸ் சாதனை செய்யவுள்ளார்கள். அதைச் சுற்றி பூங்காவும், பூங்காவைச் சுற்றி மண்பாண்ட கடைகள் மற்றும் மண்பாண்ட சமையலில் பெருமையை விளக்கும் வகையில் மாதிரி மண்பாண்ட சமையல்கூடமும் அமைக்கப்படவுள்ளது.

image

"ஆன்லைன் மண்பாண்ட விற்பனை ஆப்ஸ் உருவாக்குதல், மாவட்டம் முழுவதும் மண்பாண்ட விற்பனை நிலையங்கள் உருவாக்கும் திட்டமும் உள்ளது. மண்பாண்டத் தொழிலுக்காக அமைக்கப்படும் பொருளாதார மண்டலம் வேலூர் மாவட்டத்துக்கு கூடுதல் பெருமையைச் சேர்க்கும்" என்று உற்சாகத்துடன் முடிக்கிறார் இளைஞர் லோகேஷ்.

இங்கெல்லாம் இருக்குறவங்க ரொம்ப ஜாலியா இருக்காங்களாம்!

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close