
தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராமசாமி, எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2018-19-ல் அறிமுகம் செய்யப்படும். 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 2019-ல் மாற்றப்படும், 3, 4, 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் 2020-ல் மாற்றப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார். அத்தோடு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.