Published : 18,Sep 2020 04:13 PM
பிரசவிக்க முடியாமல் போராடிய தெருநாய்... அறுவை சிகிச்சை செய்து குட்டிகளை மீட்ட மருத்துவர்..

குட்டிகளை பிரசவிக்க முடியாமல் போராடிய தெருநாய்க்கு அறுவை சிகிச்சை செய்து குட்டிகளை மீட்ட மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரையில் சாலையோரம் சுற்றித்திரிந்த நாய் ஒன்று கர்ப்பம் தரித்திருந்த நிலையில், குட்டிகளை பிரசவிக்க முடியாமல் வெகு நேரமாக போராடி உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நாய் குறித்த தகவலை புளு கிராஸ் அமைப்பினருக்கு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாயை மீட்டு அரசு கால்நடைத்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு மருத்துவர் ஜெயகிருஷ்ணன் நாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் அந்த நாயை மீட்கச் சென்றபோது உயிருடன் ஒருகுட்டியை ஈன்ற நிலையில், மீதமுள்ள குட்டிகளை பிரசவிக்க முடியாமல் இருந்த நாய்க்கு அறுவை சிகிச்சை செய்ததில், உயிருடன் 4 நாய்க்குட்டிகளும், இறந்த நிலையில் 3 குட்டிகளும் மீட்கப்பட்டது. தெருநாய்க்கு அறுவை சிகிச்சை செய்து அதன் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.