Published : 15,Sep 2020 08:26 PM
சேலையோடு பாம்பு பிடிக்கும் துணிச்சல் பெண்: வைரல் வீடியோ

கர்நாடகாவைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் பெண் ஒருவர், வீட்டில் புகுந்த பாம்பை சேலையோடு கைகளால் பிடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
’பாம்பு என்றால் படையே நடுங்கும்’ என்பார்கள். விஷத்தன்மை கொண்ட பாம்பு என்றாலும் விஷமே இல்லாத பாம்பு என்றாலும் பாம்பு என்றாலே பம்மிக்கொண்டு பதறியடித்துக்கொண்டு ஓடுவார்கள். ஏனென்றால், சிங்கம், புலி, யானை போன்ற ஆபத்து நிறைந்த விலங்குகளுக்கு கொஞ்சமும் ஆபத்து ஏற்படுத்துவதில் சளைத்ததல்ல பாம்புகள்.
சிங்கம், புலி, யானை இவற்றிடமிருந்தாவது ஓடியோ, போக்குக்காட்டியோ தப்பித்துவிடலாம். ஆனால், பாம்புகள் அப்படியல்ல. ஒரு செகெண்ட்தான். கண்ணிமைக்கும் நேரம்தான். கொத்திவிட்டுதான் நகர ஆரம்பிக்கும்.
அப்படிப்பட்ட பாம்புகளை ஆண்களே பிடிக்க அச்சப்படுகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பாம்பு பிடிக்கும் ஆண்களை பத்து விரலுக்குள் அடக்கி விடலாம். ஆண்களையே பத்து விரலுக்குள் என்றால், பெண்கள் நிலையை சொல்லவும் வேண்டுமா? மாநிலம் அல்ல. நாடு முழுக்க பாம்பு பிடிக்கும் பெண்களை பத்து விரலுக்குள் அல்ல இரண்டு மூன்று விரலுக்குள் அடக்கி விடலாம்.
Virat Bhagini, a snake catcher, was dressed to attend a wedding when she was called to catch a snake in a home. She did it without any special equipment with perfect poise in a saree. pic.twitter.com/uSQEhtqIbA
— Dr. Ajayita (@DoctorAjayita) September 12, 2020
அந்த இரண்டு மூன்று பேரில் ஒருவர்தான் கர்நாடகாவைச் சேர்ந்த துணிச்சல் பெண் நிர்சாரா சிட்டி. பல வருடங்களாக பாம்பு பிடித்து வருபவருக்குத்தான் விழாவுக்கு கிளம்பும்போது பாம்பு பிடிக்க அழைப்பு வந்திருக்கிறது. சேலை அணிந்துகொண்டு அலங்காரம் செய்திருந்தவர், அவசரம் என்பதால் கட்டிய சேலையுடனேயே பாம்பு பிடிக்கும் இடத்திற்குச் சென்று லாவகமாக வீட்டில் ஒளிந்துகொண்ருந்த பாம்பை பிடித்து வெளியில் சென்று விட்டார்.
பொதுவாக பாம்பு பிடிப்பவர்கள் பேண்ட், சட்டை என பாதுகாப்பான ஆடைகளை அணிந்துகொண்டுதான் பாம்பு பிடிப்பார்கள். ஏனென்றால், பாம்புகள் கை,கால், முட்டி என எங்கு வேண்டுமென்றாலும் கொத்திவிடும். ஆனால், நிர்சாரா சேலையோடு பாம்பு பிடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.