[X] Close

சூர்யாவின் அறிக்கை நீதிமன்ற அவமதிப்பா?: ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கருத்து..!

சிறப்புச் செய்திகள்

Is-Surya-s-statement-a-contempt-of-court--Retired-judges-opinion

 நாடு முழுவதும் நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் நீட் தேர்வை எழுதினர். அதே நேரத்தில் தேர்வு பயத்தினால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிவலையை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சூர்யா இது குறித்தான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நீட் தேர்வு பயத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது என்றும் கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து “ வீடியோ கான்பிரன்ஸிங்” மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது என்றும் சாடியிருந்தார்.

image

இதற்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி A.B.சாஹிக்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் விவாதப் பொருளாகியுள்ள நிலையில் இது குறித்தான சந்தேகத்தை புதிய தலைமுறை வாயிலாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனிடம் முன் வைத்தோம்.


Advertisement

image

 

அவர் பேசும் போது “ புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் மெளனம் காத்து களங்கம் விளைவித்தது. நீட் தேர்வு குறித்தான பிரச்னையில், மாணவர்கள் நீட் தேர்வு எழுத உத்தரவிட்டு களங்கம் விளைவித்துள்ளது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் காணொளி வாயிலாக வழக்குகளை விசாரித்து வருவதும் உண்மை. வழக்கறிஞர்கள் நேரடியாக நீதிமன்றத்திற்கு வர தயாராக இல்லை என்பதும் உண்மை. தலைவர்களின் பாதுகாப்பு கருதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிளாஸ்டிக் ஷீட்டை பொருத்தியிருக்கிறார்கள்.


Advertisement

image

ஆனால் லட்சக்கணக்கான மாணவர்கள் மட்டும் தேர்வு எழுத வேண்டுமா?. கொரோனா பாதிப்பு சில ஆயிரங்களில் இருந்த மே மாதத்திலேயே இந்தத் தேர்வை எழுத வைத்திருக்கலாம். அப்போது எழுத வைக்க வில்லை. அதன் பின்னர் சிறிது காலம் தேர்வை தள்ளிவைத்தார்கள், அப்போதாவது இந்தத் தேர்வை நடத்தியிருக்கலாம். அதையெல்லாம் விட்டு இன்று கொரோனா பாதிப்பு உச்ச நிலையில் உள்ள இந்தக் காலக்கட்டத்தில் தேர்வை நடத்துகிறார்கள்.

இந்த உத்தரவை 6 மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்யக் கோரியும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நிலைமை இப்படியிருக்கும் பட்சத்தில், அதனை சமூக அக்கறையுள்ள ஒரு நடிகர் சுட்டிகாட்டுகிறார் என்றால் அது எப்படி நீதிமன்ற அவமதிப்பாகும். அவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை குறிப்பிடுகிறார். ஆகவே சூர்யா கூறியது நீதிமன்ற அவமதிப்பாகாது. அவர் அவரது ஆதங்கத்தில் மாணவர்களின் மீதுள்ள அக்கறையில்தான் அவ்வாறு பேசியுள்ளார்” என்றார்.

image

இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி T.சுதந்திரம் கூறும் போது “நீட் தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடாகவே நடிகர் சூர்யாவின் அறிக்கை உள்ளது. அதில், கூட்டம் மிகுந்த நீதிமன்றம் மற்றும் நீண்ட நேர காத்திருப்புடன் கூடிய நீதிமன்ற நடைமுறைகளை, ஒரே ஒருநாள் நடக்கும் நீட் தேர்வு நடைமுறையுடன் ஒப்பிட முடியாது. நீதிமன்ற பணியாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என அனைவரின் நலன் மீதான பயம் தான் காணொளி மூலம் விசாரிப்பதற்கான காரணமாக உள்ளது. கொரோனா நோய் குறித்த முன் அனுபவம் இல்லாததால்தான் பொதுமுடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடைபெற்று வருகிறது.

அதனால் சூர்யாவின் வார்த்தைகள் அவமதிப்பு ஆகுமா? ஆகாதா? என்பதை ஆராயாமல் பெருந்தன்மையாக தவிர்த்து விடலாம்” என்று கூறியுள்ளார். சூர்யா அறிக்கை குறித்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா கூறும் போது “நடிகர் சூர்யா உள்நோக்கத்துடன் இந்த கருத்தை தெரிவித்திருக்க மாட்டார். நடிகர் சூர்யா தொண்டு மற்றும் கல்வி சேவைக்காக நன்கு அறியப்பட்டவர். எனவே இந்த விவகாரத்தை பெருந்தன்மையுடன் தவிர்க்க வேண்டும்.

நடிகர் சூர்யா நீதிமன்றம் குறித்து வெளியிட்ட கருத்துக்கு ஒய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதத்தில் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் மாண்பை காக்கும் வகையில் கூறியதை புரிந்து கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.

 

- கல்யாணி பாண்டியன் 

 

 

 

 

 

 


Advertisement

Advertisement
[X] Close