Published : 11,Sep 2020 10:34 PM
பாகிஸ்தான்: நெடுஞ்சாலையில் மகள் முன்பு தாய்க்கு நடந்த கொடூரம்

பாகிஸ்தான் லாகூர்-சியால்கோட் நெடுஞ்சாலையில் கார் பழுதடைந்து உதவிக்காக காத்திருந்த பெண்ணை, மகளின் முன்பே இருவர் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
புதன்கிழமை இரவு லாகூர்-சியால்கோட் நெடுஞ்சாலையில் கார் பழுததடைந்ததை அடுத்து உறவினரின் உதவிக்காக தன் குழந்தையுடன் ஒரு பெண் காத்திருந்தார். அப்போது துப்பாக்கி முனையில் இருவர் மகளின் கண்முன்னே அப்பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர். பஞ்சாப் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் இனாம் கானி இதுதொடர்பான ஆதாரங்களை பெற்றுள்ளதாகவும், இது குற்றவாளிகளை கண்டறிய வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
"இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் நாங்கள் இதுவரை மிகப்பெரிய பணிகளை செய்துள்ளோம். இந்த குற்றத்தின் சந்தேக நபர்கள் இருந்த கிராமத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், ”என்று கானி கூறினார். இந்த வழக்கில் சந்தேகத்திற்குரிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையில் ஒரு டோல் பிளாசாவைக் கடக்கும்போது இந்த பெண்ணின் கார் பழுதடைந்து நின்றுவிட்டது. அதன்பின் அப்பெண் அருகிலுள்ள நகரமான குஜ்ரான்வாலாவில் உள்ள ஒரு ஆண் உறவினரின் உதவிக்காகக் காத்திருந்தபோது இந்த கொடுமை நடந்ததாக கூறப்படுகிறது. லாகூர் காவல்துறைத் தலைவர் உமர் ஷேக் ஆரம்பத்தில் இந்த சம்பவத்தில் இந்த பெண் ஏன் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டினார் என்று அந்தப் பெண்ணைக் குற்றம் சாட்டினார்.