Published : 02,Jul 2017 04:54 PM

கள்ளக்காதலனுடன் சேர்ந்து திருமணமான 11வதே நாளில் கணவரை தீர்த்துக்கட்டிய செவிலியர்

The-nurse-who-resolved-her-husband-on-the-11th-day-of-marriage-along-with-killed

தனது உறவினரான பழைய காதலனை  மறக்க முடியாமல் திருமணமான 11 நாளில்  கணவரை  செவிலியர் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கணேஷ்குமாருக்கும் மண்டபம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமிக்கும் கடந்த ஜூன் 11-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி அதாவது திருமணமான 11வது நாளில்  சக்கரக்கோட்டை பகுதியில் கொலை செய்யப்பட்டு கணேஷ்குமார் பிணமாக கிடந்தார்.
இந்தக் கொலைகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கணேஷ்குமாரின் மனைவி பாக்கியலட்சுமியையும் அவரது உறவினரான  முன்னாள் காதலன் லோகநாதனையும் கைது செய்துள்ளனர். 
இதுகுறித்து லோகநாதன் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது மாமன் மகளான பாக்கியலட்சுமியை வெகு நாட்களாக காதலித்து வந்தேன்.  பாக்கியலட்சுமிக்கு 27 வயது. எனக்கு 22 வயது. இதனால் எங்கள் திருமணத்திற்கு இருவீட்டிலும் சம்மதிக்கவில்லை. பிறகு பாக்கியலட்சுமியை கட்டாயப் படுத்தி கணேஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனாலும், திருமணத்திற்கு பின்னரும் பாக்கியலட்சுமியுடன்  தொடர்பு இருந்து வந்தது. 
இந்நிலையில், மதுரைக்கு வேலைதேடி அடிக்கடி கணேஷ்குமார் சென்று வந்தார். இதனை பயன்படுத்தி பாக்கியலட்சுமியை தனிமையில் சந்தித்து வந்தேன்  கடந்த 20-ந் தேதி இருவரும் சந்தித்தபோது எங்களுக்கு இடையூறாக இருக்கும் கணேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். இதற்கு ஏற்றாற் போல் கணேஷ்குமார் அவரது செல்போனை பழுது பார்க்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனை பயன்படுத்தி அவரை மறுநாள்  சக்கரக்கோட்டை மதுக்கடைக்கு அழைத்துச்சென்று மது அருந்தினோம். பின்னர் அவரை இரவு 11 மணி அளவில் அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர் மது மயக்கத்தில் இருந்தபோது கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்