Published : 02,Jul 2017 03:50 AM
லாரிகள் மோதல்: ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்!

ஓசூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் ராட்சத கிரானைட் கல் ஒன்றை ஏற்றி கொண்டு கனரக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. கிருஷ்ணகிரி – ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரில் மற்றொரு லாரி வந்தது. பெங்களுரிலிருந்து நாமக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த லாரி ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கிரானைட் கல், பெங்களூர் லாரி மீது கவிழ்ந்தது. இதனால் அந்த லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பெங்களூர் லாரியில் பயணித்த 5 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயமடைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்த சூளகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து அவர்களை மீட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்கப்பட்ட அவர்கள், ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு பணியில் 4 கிரைன் மற்றும் 2 பொக்லைன் எந்திரம் பயண்படுத்தப்பட்டது. இந்த விபத்தால் கிருஷ்ணகிரி – ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.