Published : 04,Sep 2020 03:28 PM
பி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி முடிவை ஏற்க இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் மறுப்பு.?

தமிழக அரசு அறிவித்த பி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பல கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனையடுத்து பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியானது.
இந்நிலையில் பத்து வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வைத் தவிர அரியர் எழுதும் மாணவர்கள் தேர்வெழுத பணம் கட்டியிருந்தாலே அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரியருக்கு பணம் கட்டிய மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தனர். இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களிலும் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியும் நன்றி பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.