Published : 30,Aug 2020 12:34 PM

கவலை வேண்டாம்... கலக்கு தம்பி... மனநல ஆலோசனைகள்

Psychiatric-advice-for-the-youngsters---who-moves-to-suicide

வாழ்க்கையில் எதிர்ப்படும் நெருக்கடிகள், தோல்விகள், துயரங்கள் அனைத்தும் தொடர்கதையல்ல. இருள் என்பது குறைந்த ஒளி என்கிறார் மகாகவி பாரதி. கொரோனா காலத்தில் மனித மனங்கள் இறுக்கமடைந்துள்ளன.

வேலையிழப்புகள், இடம்பெயரும் வாழ்க்கை, பொருளாதார இழப்புகள் என எத்தனையோ பிரச்னைகள். ஆனாலும் நாட்களும் வாழ்க்கையும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. தற்கொலைக்குத் தூண்டும் கவலையான மனநிலையைத் தவிர்ப்பது பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறார் சென்னை செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி உளவியல் உதவிப் பேராசிரியர் லாவண்யா ஆதிமூலம்…

image

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஓர் ஆண்டில் ஏறக்குறைய 8 லட்சம் பேர் தற்கொலை மூலம் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. உலகில் ஏற்படும் மரணங்களுக்கு மூன்றாவது மிகப்பெரிய காரணமாக தற்கொலையே இருந்துவருகிறது. உலகம் முழுவதும் நாற்பது நொடிக்குள் ஒருவரை நாம் தற்கொலையின் காரணமாக இழந்துவருகிறோம்.

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் வாழ்வின் ஆதாரமாக இருப்பது பிள்ளைகளே. கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளைகள் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்துகொள்வது மீளமுடியாத துயரத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகிறது. 10 முதல் 14 வயதுடைய குழந்தைகளிடையே அதிக தற்கொலைகள் நிகழ்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் சதவிகிதமே அதிகம்.

image

இப்படித்தான்…
உலக அளவில் விஷம் அருந்துதல், தன்னைத்தானே தூக்கிட்டுக்கொள்ளுதல், நெருப்புக்கு இரையாகுதல், கூரிய பொருள்களைக் கொண்டு தன்னை துன்புறுத்திக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். எந்த ஒரு செய்தித்தாளை எடுத்தாலும் அதிகமாக பார்ப்பது தற்கொலை தொடர்பான செய்திகளைத்தான். அதிகமான தற்கொலைகள் விஷம் அருந்துவதன் மூலம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படி என்னதான் காரணமாக இருக்கும் என்று பார்த்தால், தேர்வில் மதிப்பெண் எடுக்கவில்லை. நான் கேட்டதை என் பெற்றோர்கள் வாங்கிக்கொடுக்கவில்லை. உறவுமுறையில் பிரச்னை என்று பல காரணங்களை நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. நம்முடைய பிரச்னையை யாராலும் தீர்க்கமுடியாது என்று நினைக்கிறார்கள். யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது என்ற நிலைமைக்கு வருகிறார்கள். பின்னர் நாம் ஏன் வாழ்கிறோம் என நினைத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள்.

image

(பேராசிரியர் லாவண்யா ஆதிமூலம்) 

ஏன் இப்படி நடக்கிறது?
அதிக அளவிலான தற்கொலைகளுக்கு Impulsive behaviour என்று சொல்லக்கூடிய, அதிகமாக உணர்ச்சிவசப்படுவதே காரணமாக இருக்கிறது. உளவியல் ஆய்வின்படி, மனப்பிரச்சனைகளுக்கு உட்பட்ட குழந்தைகளே தற்கொலையை நாடி செல்வதாகச் சொல்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பு (Global School based health survey) பல நாடுகளில் செய்த ஆய்வின்படி, இளம்பருவத்தினர் கீழ்க்காணும் பிரச்னைகளால் மனமொடிகிறார்கள். வீட்டில் நடக்கும் வன்கொடுமை, ராகிங், மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், மனத்துடன் தொடர்புடைய நோய்கள், பெற்றோர்களின் கண்காணிப்பில் இருந்து தவறிய குழந்தைகள், பாலியல் வன்கொடுமை மற்றும் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் பிரச்னைகளால் தற்கொலைகள் நிகழ்கின்றன.

image

மனநிலையின் அறிகுறிகள்
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். பிறர் சொல்லும் சொற்கள் கடும் சொற்களாக மாறி தற்கொலையை நோக்கிக்கூட தள்ளிவிடும் ஆற்றல் உடையவை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மனஅழுத்தம்தான் தற்கொலை எண்ணத்தின் ஆரம்ப அறிகுறி என்றால் ஆம் என்கின்றனர் நிபுணர்கள்.

சில அறிகுறிகளின் மூலம் நாம் விழிப்புணர்வுடன் தற்கொலை என்ற எண்ணம் உடையவர்களை கண்டறியமுடியும். குடும்பத்தில் எவர் ஒருவர் தற்கொலை முயற்சியை செய்திருந்தாலும், அவரது பரம்பரையில் வரும் நபர்களுக்கு தற்கொலை எண்ணம் வர அதிக வாய்ப்புண்டு. ஏற்கெனவே தற்கொலை செய்ய முற்பட்டவர்களுக்கு மீண்டும் செய்ய அதிக வாய்ப்புண்டு. மரபியல் பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம்.

image

எவ்வகையில் அறிந்துகொள்வது?
தற்கொலை எண்ணம் உடையோர் தன்னைத்தானே அதிகமாக தனிமைப்படுத்திக்கொள்வர், மற்றவர்களுடன் கலகலப்பாகப் பேசமாட்டார்கள், பேசும்போது கண்களைப் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பார்கள், சிலர் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்வதும் உண்டு, சுறுசுறுப்பின்றி சோம்பலாகத் திரிவர், அடிக்கடி விடுப்பு எடுப்பது, திடீரென்று அழுவது, சாப்பிடுவது மற்றும் தூங்கும் நேரங்களில் உள்ள வித்தியாசத்தையும் வைத்து அறிந்துகொள்ளலாம். எதிலும் ஆர்வம் காட்டாத தன்மை, சுய அக்கறையற்ற தன்மையும் இருக்கும்.

மேலும் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மூலமும் அறிந்துகொள்ளலாம். என்னால் எந்தப் பிரச்சினையும் இனிமேல் நடக்காது என்பார்கள். பிடித்தமான பொருள்களை மற்றவர்களிடம் கொடுப்பது, திடீரென்று அதிக உற்சாகத்துடன் நடந்துகொள்வது, பரிசுப் பொருள்களை பலரிடம் கொடுப்பது, தற்கொலைக் குறிப்புகளை எழுதுவது என இதுபோன்ற சில அறிகுறிகளின் மூலம் தற்கொலை எண்ணம் உடையவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

image

தடுக்கும் வழிமுறைகள்
இளைஞர்களை தற்கொலைப் பிடியிலிருந்து காப்பாற்றவேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது. இக்காலத் தலைமுறையினர் தேவைக்கு அதிகமாகவே இளம்வயதில் பல விஷயங்களைப் பெறுவதால் சில அடிப்படை விஷயங்களைக் கற்க முடியாமல் போகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான தரமான நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது.

அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நடப்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. நண்பர்கள் யார், காலை முதல் இரவு வரை அன்றாடச் செயல்பாடுகளில் என்ன நடந்தது என்று பெற்றோர்கள் ஆர்வத்துடன் கேட்கும்போது பிள்ளைகள் பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். இந்தப் பழக்கத்தை சிறுபிராயம் முதலே ஏற்படுத்தவேண்டும். அது பெரியவர்களாக அவர் வளரும்போது பிரச்சினைகளைத் தவிர்க்க பேருதவியாக இருக்கும்.

image

சிறுவயதிலேயே குடும்பத்திற்கான வரைமுறைகளையும் விழுமியங்களையும் சொல்லி அவர்களைப் பழக்கப்படுத்தவேண்டும்.  ஆரம்பத்தில் பொத்திப்பொத்தி வைத்துவிட்டு, பொறுப்புகளைக் கொடுக்கும்போது அவர்கள் செய்வதறியாமல் திகைக்கின்றனர். சிறுவயதிலிருந்தே பொறுப்புகளை அவர்களிடம் கொடுத்து, சிறு சிறு தவறுகளை பொருட்படுத்தாமல் அவர்களுக்கான கற்றல் இடைவெளியை வழங்கும்போது, பெரும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

பெற்றோர்கள் நண்பர்களாகவும் இருக்கும்போது பிள்ளைகளுக்கு பெரும் துணையாக துன்பத்திலும் துணை இருப்பீர்கள். குழந்தைகளிடம் பயன்படுத்தும் வார்த்தைகளின்மீது அதிக கவனம் வைத்திருப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கமுடியும். பிள்ளைகளை எப்போதும் தன் கண்காணிப்பில் வைத்திருக்கும்போது, அவர்களிடம் தென்படும் சிறு சிறு வித்தியாசங்களையும் அறிந்து அவ்வப்போதே தெளிவுபடுத்தும் போது பேரிடர்களைத் தவிர்க்கமுடியும்.

நண்பர்களாக மாறுங்கள்
ஆரோக்கியமான உணவின் அவசியத்தையும் தூக்கத்தின் முக்கியத்துவத்தையும் சிறுவயதிலிருந்தே கற்பிக்கும்போது அவர்களின் வாழ்க்கை மேம்படும். அவ்வப்போது ஒவ்வொரு பிள்ளையும் பொறுப்புணர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியும்போது சுயக்கட்டுப்பாடு தன்னிச்சையாகவே ஏற்படும்.

image

சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் அவர்களை சுயமாக சிந்தித்து முடிவெடுக்க தயார்படுத்தும்போது தோல்விகளால் ஏற்படும் பயத்தால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளமுடியும். தற்போதைய இளம் தலைமுறையினரிடையே instant gratification எனப்படும் உடனடி திருப்தி அடையும் மனோபாவம் இருக்கிறது. இதுவும் தற்கொலைக்கான மிகமுக்கியமான காரணங்களில் ஒன்று. பிள்ளைகள் கேட்ட அனைத்தையும் உடனடியாக கொடுத்துவிட வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். “எனக்கு அப்படி இல்லையே, என் பிள்ளையை காக்கவைக்கக்கூடாது” என்ற எண்ணத்தை மாற்றி காத்திருத்தலின் அருமையை கற்றுக்கொடுக்கவேண்டும்.

image

இந்த வழிமுறைகள் மூலம் வளரும் குழந்தைகள் தன்னிச்சையாக செயல்படும் ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். தோல்விக்கு அஞ்சமாட்டார்கள். வாழ்க்கையை நேர்மறையாகப் பார்க்கப் பழகியிருப்பார்கள். வெளியே மகிழ்ச்சியை தேடுவதை நிறுத்திவிட்டு, அது தன்னுள்தான் இருக்கிறது என்ற சூட்சுமத்தை புரிந்துகொண்ட குழந்தைகள் எப்போதும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பலமாகவே இருப்பார்கள்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்