Published : 27,Aug 2020 10:31 AM
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை.. நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (CUCET)செப்டம்பர் 18, 19, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கான தகுதியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள 18 மத்திய பல்கலைக்கழகங்கள் இணைந்து பொது நுழைவுத்தேர்வை நடத்திவருகின்றன. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இளநிலை, முதுநிலை, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான இந்த நுழைவுத்தேர்வு திருவாரூரில் மூன்று தேர்வுமையங்கள், சென்னை, கோவை, கடலூர், மதுரை, நாகர்கோவில், திருச்சி ஆகிய தேர்வுமையங்களில் நடைபெறும். மேலும், நாடு முழுவதும் உள்ள 141 முக்கிய நகரங்களிலும் நடைபெறவுள்ளது.
தேர்வு எழுதவரும் மாணவர்கள் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் எனவும் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
விவரங்களுக்கு: https://cutn.ac.in