Published : 23,Aug 2020 07:04 PM
ஆவடியில் அடுத்தடுத்து ஐந்து கடைகளில் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு !

ஆவடி அருகே அடுத்தடுத்து ஐந்து கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற நிலையில், கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் கடந்த வாரத்தில் இரவு நேரங்களில் பூட்டிய கதவை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கடந்த வாரம் திருமுல்லைவாயில் பகுதியில் ஐந்து கடைகளின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு திருமுல்லைவாயில் எட்டியம்மன் நகரில் உள்ள மளிகை கடையின் இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் வட மாநிலத்தவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கடையை நோட்டமிட்ட பின்பு இரும்பு ராடால் ஷட்டரை உடைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கடந்த வாரத்தில் அடுத்தடுத்து ஐந்து கடைகளில் கொள்ளையடித்த சம்பவத்தில் இவருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.