
தடையை மீறி விநாயகர் சிலை நிறுவினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி நாளில் சிலையை தெருக்களில் நிறுவக்கூடாது எனக்கூறி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசின் உத்தரவை மீறுவோம் என்றும் தடையை மீறி சிலைகள் நிறுவப்படும் எனவும் இந்து முன்னணி கட்சியினர் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தடையை மீறி சிலை நிறுவப்படும் என இந்து முன்னணியினர் மிரட்டல் விடும் தொனியில் பேசியுள்ளனர் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இதுபோன்ற மிரட்டல்களிலிருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை, அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர். மேலும், விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.