Published : 19,Aug 2020 11:35 AM

“குழந்தைகளின் முன்னேற்றமே என் ஒரே கனவு”- ஊரடங்கிலும் ஓய்வில்லா பணியில் அரசு ஆசிரியர்!

Teacher-of-three-language-speaking-students-handwriting-training-with-WhatsApp

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப், ஆன்லைன், நுண் வகுப்பறைகள் என கிடைத்த வழிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடம் நடத்திவருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கொத்தப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை ருக்மணியின் பணி அதிலிருந்து வித்தியாசமானதாக இருக்கிறது. பள்ளி மாணவர்களின் கையெழுத்துப் பயிற்சிக்காக வாட்ஸ் ஆப் குழு ஒன்றை உருவாக்கி தினமும் பயிற்சி அளித்துள்ளார். மூன்று மொழிகள் பேசும் மாணவர்களைக் கொண்ட பள்ளியில் பணியாற்றிவரும் அவர், தன் ஆசிரியர் பணி அனுபவத்தில் செய்த மாற்றங்கள் பற்றி பேசுகிறார்…

image

“நான் 1991 ஜனவரியில் பணியில் சேர்ந்தேன். இருபத்தியோரு வயதில் வேலை கிடைத்தது. எனக்கு முதலில் வேலையில் பெரிதாக நாட்டமில்லை. அதற்குக் காரணம், தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் கர்நாடக எல்லையில் மும்மொழி பேசும் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பணி நியமனம் கிடைத்தது. கண்ணைக் காட்டி காட்டில்விட்டதுபோல இருந்தது. என்ன செய்வதென புரியவில்லை.

அந்தப் பள்ளியையும், குழந்தைகளையும் பார்த்து, "நான் பள்ளிக்குப் போகமாட்டேன், எனக்கு வேலைவேண்டாம்" என அப்பாவின் மடியில் படுத்து குழந்தைபோல் அழுததை இன்று நினைத்தால், காலம் எனக்குள் செய்த மாற்றங்களை உணர்கிறேன். இன்று பள்ளி மற்றும் குழந்தைகள் முன்னேற்றம் தவிர்த்து வேறெதுவும் என் நினைவில் இல்லை.

image

மூன்று மொழிகள்
இந்தப் பகுதியில் பிள்ளைகள் பல மொழிகள் பேசுவதால் அவர்கள் பள்ளிக்கு வந்ததும் தமிழில் பேசினால் பயந்துவிடுவார்கள். எனவே நான் அவர்கள் பேசும் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்த இரு மொழிகளும் கலந்த தமிழ் ஆகிய மொழிகளைப் பேசக் கற்றுக்கொண்டேன். பின்னர் அவர்கள் மொழியில் பேசி என்னை அவர்களுக்குள் ஒருத்தியாக ஏற்ற பின்னரே பாடம் நடத்த ஆரம்பித்தேன். பிறகு மெல்ல அவர்களுக்கு தமிழில் பேசவும் பயிற்சி அளித்தேன்.

image

(மாணவர்களின் அழகான கையெழுத்து)

கற்பித்தல் உத்திகள்
பாடப்பொருள் மாணவர்களுக்குப் புரிந்துகொள்வதற்கு ஏற்ப எளிய கற்றல், கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தினேன். அதிலும் குறிப்பாக பெரும்பாலும் தூக்கி எறியும் பழைய பொருட்கள் கொண்டு கற்றல், கற்பித்தல் உபகரணங்களைச் செய்வேன். மறுசுழற்சியின் அவசியத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தினேன். தற்போது ஸ்மார்ட் டிவி, யூட்யூப் போன்றவற்றையும் தேவைக்கேற்பப் பயன்படுத்தி பாடம் நடத்திவருகிறேன்.

நான் உதவி ஆசிரியர் என்றாலும் பள்ளியில் சுற்றுச்சுவர், ஸ்மார்ட் டிவி, தரைதளம், நடைபாதையில் சிமெண்டு போடுதல், மின் இணைப்பு, மாணவர்கள் எழுதுவதற்கான வட்ட மேசைகள் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக நிறைவேற்றினேன். அதனால் கிடைத்த மனநிறைவுக்கு அளவேயில்லை.

image

மாணவர்களின் பெற்றோர்கள் என் பள்ளிச் செயல்பாடுகளுக்கு உதவமுடியாத பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களாக இருந்தார்கள். ஆனாலும் எனக்குத் தேவையான நேரங்களில் தங்களால் முடிந்த அளவிற்கு தமது பங்களிப்பைக் கொடுத்து உதவி செய்வார்கள். எங்கள் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்திற்கும் ஃபேஸ்புக் நண்பர்களே அதிகமாக உதவினார்கள்.

ஊரடங்குக் காலம்
வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது சென்று மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு தின்பண்டங்கள் வாங்கித்தருவேன். அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துப் பேசுவேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர் உடல், மன ஆரோக்கியத்தை உறுதிசெய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வலியுறுத்தி வருகிறேன். கிராமப்புறங்களில் வேலையின்றி மிகுந்த வறுமை நிலையில் இருந்த பெற்றோர்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொடுத்தேன்.

image

இந்த நாட்களில் மாணவர்கள் குறைந்தபட்சம் கையெழுத்துப் பயிற்சியாவது செய்யட்டுமே என்ற நோக்கத்தில் வாட்ஸ் ஆப் வசதியுள்ள குழந்தைகளை ஒருங்கிணைத்து குழுவை உருவாக்கினேன். தினமும் நன்றாக எழுதி அனுப்பும் மாணவர்களின் கையெழுத்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வைப்பதாகச் சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தினேன். பிறகு அதேபோல் மிக அழகாக எழுதுபவர்களின் கையெழுத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைத்தேன். மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார்கள்.

விருதுகளை எதிர்பார்ப்பதில்லை
நான் அங்கீகாரங்களையோ, விருதுகளையோ எதிர்பார்த்து பணி செய்வதில்லை. அரசு மற்றும் லயன்ஸ் கிளப் மூலம் பெற்ற விருதுகள், தொலைக்காட்சிச் செய்திகள், பத்திரிகைச் செய்திகள் தவிர்த்து, என் பள்ளிக் குழந்தைகள் படித்து முடித்து இன்று நல்ல வேலைகளில் இருப்பது எல்லையற்ற மகிழ்வைத் தருகிறது. அதில் பலரும் என்னை மறக்காமல் என்னுடன் தொடர்பில் இருப்பதும், எனக்கு அளிக்கும் சின்னச் சின்ன அன்புப் பரிசுகளும், என் மேல் அவர்கள் கொண்ட பேரன்புமே என் வாழ்நாள் விருதுகள்.

image

எதிர்பார்க்கும் மாற்றங்கள்
பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை தன்னிறைவு பெறச் செய்து பெற்றோர், மாணவர் விரும்பும் பள்ளியாக மாற்றுதல். மாணவர்களை சமூகத்தில் நல்ல குடிமக்களாக மாற்றுதல், தன் பொறுப்பு, கடமையை, உணர்த்தும் தரமான கல்வியை வழங்குதல் என்பதையே நான் ஆசிரியப் பணியின் இலக்காக வைத்திருக்கிறேன்.

பள்ளிகள் என்றாலே அரசுப் பள்ளிகள் மட்டுமே என மக்கள் நினைக்கும் அளவிற்கு கட்டமைப்பு வசதிகள், நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், கணினிப் பயன்பாடு, நூலகப் பயன்பாடு, புதுமையான கற்பித்தல் முறைகள், வகுப்புக்கு ஓர் ஆசிரியர் போன்ற மாற்றங்கள் வரவேண்டும்.

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்