
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி, ரவி சாஸ்திரியை சச்சின் டெண்டுல்கர் சமாதானப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் வரிசையில் தான் நிற்க விரும்பவில்லை என்று ரவி சாஸ்திரி தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பதவியேற்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோலியும் விருப்பம் தெரிவித்துள்ளார். குடும்பத்தினருடன் லண்டனில் தற்போது விடுமுறையைக் கழித்து வரும் ரவி சாஸ்திரி, இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக ரவி சாஸ்திரியை சச்சின் டெண்டுல்கர் சமாதானப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் பேசியதற்கு பின்னரே, பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி விண்ணப்பித்ததாகவும் கூறப்படுகிறது. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை ஜூலை 9 வரை நீட்டித்து பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ரவி சாஸ்திரியைத் தவிர டாம் மூடி, விரேந்திர சேவாக் உள்ளிட்டோர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்படுவதற்கு முன்பாக, அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.