[X] Close

’இந்திய பத்திரிகை உலகின் ஸ்கூப் மன்னர்’ மிசாவில் சிறைசென்ற ’குல்தீப் நய்யார்’ பிறந்தநாள்!

இந்தியா

-Scoop-King-of-India----Kuldeep-Nayyar

இந்திய ஊடக உலகின் மிகச்சிறந்த பத்திரிகையாளர்களுள் ஒருவர் குல்தீப் நய்யார். தன் 95 ஆண்டு கால வாழ்க்கையில் 75 ஆண்டுகள் இடைவிடாமல் எழுதியவர். பிரிட்டிஷ் இந்தியா, சுதந்திர போராட்டம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, எமர்ஜென்ஸி காலகட்டம், நரேந்திர மோடி காலம் என நவீன இந்தியாவின் அத்தனை வரலாற்று சம்பவங்களையும் கண்ணெதிரே கண்ட சாட்சி அவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் ஐ.நாவில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். இன்று அவரின் 97 வது பிறந்தநாள்.


Advertisement

 

image


Advertisement

பஞ்சாபில் கடந்த 1923 ஆம் ஆண்டு குல்தீப் நய்யார் பிறந்தார். இவரது தந்தை குர்பாக்ஸ் சிங். தாயார் பூரான் தேவி. பள்ளிக்கல்வி, கல்லூரி அனைத்தையும் சியோல்கோட்டிலேயே முடித்தவர், இதழியல் மீதான ஆர்வத்தால் அமெரிக்காவில் இதழியல் படிப்பை முடித்தார். ஆரம்பத்தில் உருது பத்திரிக்கையாளராக இருந்தவர், ஆங்கிலப் பத்திரிக்கைக்கு மாறினார். நீண்ட அனுபவமும், அதை அறிவுக்கூர்மையோடு எழுதும் ஆற்றலும், மிசா காலத்தின்போது இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்ட முதல் பத்திரிகையாளர் போன்ற காரணங்களாலும் இந்தியாவின் தலைசிறந்த;தவிர்க்க முடியாத பத்திரிகையாளர் ஆகிறார்.

image

இவ்வளவு, சிறப்புகள் கொண்ட குல்தீப் நய்யாரை தமிழில் பேட்டிக்கண்ட பத்திரிகையாளர் இரா. வினோத்திடம், குல்தீப் நய்யாரின் நினைவுகள் குறித்துக் கேட்டோம். உற்சாகமுடன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.  

   “முதுமையின் முற்றத்தில் இருந்த குல்தீப் நய்யார் 2012ல் தன‌து 'பியாண்ட் தி லைன்ஸ்' நூல் வெளியீட்டுக்காக பெங்களூரு வந்திருந்தார். ’பத்திரிகை உலகின் சூப்பர் ஸ்டாரான அவரை சந்தித்து, பேட்டி எடுத்தே தீர வேண்டும்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அன்றைய தினம் மாலை வேளையில் இந்திரா நகரில் நிகழ்ச்சி நடந்த கட்டிடத்துக்கு வெளியே இருந்த புல்வெளியில் பூ போல வெளிர் நிற குர்தா அணிந்து அமர்ந்திருந்தார். அடுத்த கணமே குல்தீப் நய்யார் முன்னால் போய், 'உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களெல்லாம் என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்' என சொல்லி, அவரது 'ஸ்கூப்' நூலை நீட்டி கையெழுத்து வாங்கினேன்.

இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டின் மொழியில் தன் நூலை பார்த்து பரவசமானார். தமிழ் பத்திரிகை உலகைப் பற்றி விசாரித்தார். நான் பேட்டிக்கு நேரம் கேட்பதற்கு முன்பாக அவரே, 'உங்களிடம் நிறைய பேச வேண்டும். நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னை பார்த்துவிட்டு போங்க' என்றார். இரவு 9.30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் வந்திருந்த பல பிரபலங்கள்  அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஒதுங்கி நின்றிருந்த என்னையும் அருகில் வர சொல்லி, 'எனர்ஜிடிக் இளம் பத்திரிகையாளர்' என அருகிலிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

நான் பேச்சு வாக்கில் 'இரவு எத்தனை மணிக்கு தூங்குவீர்கள்?' என கேட்டேன். 'நான் தூங்க 3 மணி ஆகிவிடும். இன்னைக்கு கூட ஹோட்டல் ரூமுக்கு நீங்க வரலாம்' என புன்முறுவலோடு சொன்னார். அதற்காகவே காத்திருந்த நான், அவரது காரிலே ஏறி 'ஓபராய்' ஹோட்டலுக்கு சென்றேன். 10.30 மணிக்கு தொடங்கிய எங்களது உரையாடல் முடிய அதிகாலை 3.30 மணி ஆகிவிட்டது.


Advertisement

image

மூத்தப் பத்திரிகையாளர் குல்தீப் நய்யாருடன் பத்திரிகையாளர் இரா.வினோத்

அந்த 6 மணி நேரத்தில் இன்றைய‌ பாகிஸ்தானில் அவர் பிறந்தது முதல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் வரை நிறைய பேசினோம். உருது பத்திரிகையில் பத்திரிகையாளர் வாழ்க்கையை தொடங்கியது முதல் கடின உழைப்பின் மூலம் தேசிய, சர்வதேச பத்திரிகைகளில் பெரிய பொறுப்பு வகித்தது வரை நிறைய பேசினார். ஒரு வட்டார மொழி பத்திரிகையில் இருந்து சர்வதேச பத்திரிகைக்கு மாறியது வரை எதிர்க்கொண்ட சவால்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், பட்ட கஷ்டங்களை பாடமாகவே எடுத்தார் குல்தீப் நய்யார்.

image

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள், ஜவஹர்லால் நேருவின் அரசு செயல்பட்ட விதம், எமர்ஜென்ஸி காலக்கட்டம் ஆகியவற்றை அருகில் இருந்து பார்த்து பதிவு செய்ததை காட்சிகளாக விவரித்தார். மவுண்ட் பேட்டன் பிரபு, ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர், இந்திரா காந்தி, மன்மோகன் சிங் என பல்வேறு தலைவர்களுடனான நட்பை பற்றி விளக்கினார். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியா, சுதந்திர இந்தியா ஆகிய இரண்டிலும் நிகழ்ந்த சம்பவங்களை பற்றி நிறைய பேசினார். இறுதியில் ஊடகங்களின் கடந்த காலம், நிகழ்கால ஊடகங்களின் போக்கு, அவற்றின் எதிர்காலம், பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும் என அவரது எண்ணங்களை எடுத்துரைத்தார்.
எல்லாவற்றையும் முதல் பெஞ்ச் மாணவனைப் போல ஆர்வமாக கேட்டுக்கொண்டேன். குல்தீப் நய்யார் இன்னும் அதிகமாக பிடித்துப்போன நிலையில், கைகளில் விடைபெறும் போது அவரது வலது கை விரல்களுக்கு முத்தமிட்டேன். அதனால் உற்சாகமான அவர் எனக்கு நெற்றியை தடவி, கண்ணத்தை வருடி ' உன் கேள்விகள் நீ யாரென்பதை சொல்கிறது. நீ பெரிய பத்திரிகையாளனாக வருவாய்'என வாழ்த்தினார். என் பத்திரிகையுலக வாழ்வில் அந்த இரவு உண்மையிலே ஆசீர்வதிக்கப்பட்ட இரவாக அமைந்தது.

 

image

இந்த உரையாடல்  ஆனந்த விகடனில் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், வைகோ போன்றோர் டெல்லி சென்று குல்தீப் நய்யாரை பாராட்டிவிட்டு வந்தனர். குல்தீப் நய்யார் பெங்களூருவில் இருந்த 3 நாட்களும் அவரோடே ஒட்டிக்கொண்டிருந்தேன். நிறைய பேசினேன் என்று சொல்வதைவிட, அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். அரசியல்,பத்திரிகை தவிர்த்து உருது கவிதைகள், இந்துஸ்தானி இசை, பாரசீக பழமொழிகள் பற்றி நிறைய பேசினார்.

குல்தீப் நய்யாரின் கட்டுரைகள் 80க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிக் கொண்டிருந்த நிலையிலும், 'என் கட்டுரையை உங்கள் பத்திரிகையில் போடுவீர்களா?' என புதிய பத்திரிகையாளரைப் போல கேட்டார். அவர் வாரந்தோறும் அனுப்பிய கட்டுரைகளை அந்த காலக்கட்டத்தில் பத்திரிகையில் பயன்படுத்த முடியவில்லை. இருப்பினும் அதற்காக அவர் கோபித்துக்கொள்ளவில்லை.

image

பத்திரிகையாளர் இரா.வினோத்

பின்னர் ஒருநாள் தனது நூல்களை தமிழில் வெளியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அது பொருளாதார ரீதியான காரணங்களால் உடனே சாத்தியப்படாமல் போனது. அவரது விருப்பங்களை நிறைவேற்ற முடியாததால் குல்தீப் நய்யாரோடு பேசுவது எனக்கே அசௌகரியமாக இருந்தது. கடைசியாக டெல்லி சென்றிருந்த போது குல்தீப் நய்யாரை போய் பார்த்தேன். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த, அவர் சற்று சோர்வாகவும், மறதி ஆட்கொண்டிருந்த நிலையிலும் இருந்தார். அப்போதும்  கடும் சிரமத்தோடே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தார்.

image

குல்தீப் நய்யாரை பொறுத்தவரை அவர் அதிகாரத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். அதன் மூலம் சில அனுகூலங்களையும் அடைந்தார். சிறை கொட்டடி வரையிலான துன்பங்களையும் அனுபவித்தார். எப்போதும் அதிகாரத்துக்கு எதிரான அஞ்சாத பத்திரிகையாளராக இருந்தார். சுதந்திரம் மிக்கவராக இருந்தார். தான் நம்பிய விழுமியங்களுக்காக இயங்கினார். தன் வாழ்நாளில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம், மனித உரிமை, அடித்தள‌ சமூக விடுதலை ஆகியவற்றுக்காக எழுதுவதோடு நில்லாமல் களத்தில் இறங்கி போராடவும் செய்தார். ஒரு பத்திரிகையாளனாக இந்த குணாம்சத்தையே அவரிடம் இருந்து பத்திரிகையாளர்கள் கற்க வேண்டிய பாடமாக நான் கருதுகிறேன்” என்று பத்திரிகையாளர் இரா.வினோத் மெய்சிலிர்க்கிறார். 


Advertisement

Advertisement
[X] Close