Published : 12,Aug 2020 08:01 AM
அட்மிட் செய்ய 3 லட்சம் கேட்ட மருத்துவமனை?: ஆம்புலன்ஸிலேயே நோயாளி உயிரிழந்ததாக புகார்

சேர்க்கைக் கட்டணமாக ரூ.3 லட்சம் செலுத்திய பிறகே சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கறாராக கூறியதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளார்.
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள டாம்லூக் நகரில் வசிக்கும் 60 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை இ.எம் பைபாஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உறவினர்கள் சென்றுள்ளனர்.
அப்போது சேர்க்கைக் கட்டணமாக ரூ .3 லட்சம் செலுத்திய பிறகே சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கறாராக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவரது மனைவி நோயாளியை ஆம்புலன்சில் வைத்துவிட்டு பணம் ஏற்பாடு செய்ய அலைந்துள்ளார். ஆனால் அதற்குள்ளாகவே நோயாளியின் உயிர் ஆம்புலன்ஸிலேயே பிரிந்தது.
இதுகுறித்து இறந்தவரின் உறவினர் ஒருவர் கூறும்போது, ‘’நோயாளியின் உடல்நிலை மோசமாக உள்ளது. நீங்கள் சிகிச்சையை ஆரம்பியுங்கள். அதற்குள் நாங்கள் பணம் தயார் செய்து கட்டி விடுவோம் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சி கேட்டோம்.
ஆனால் அவர்கள் அட்மிஷன் கட்டணத்திலேயே குறியாக இருந்தார்கள். சிகிச்சை தாமதமானதால் அவர் உயிரிழந்து விட்டார்'' என்று கூறினார்.