Published : 10,Aug 2020 07:27 PM

'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்..' வீட்டையே பள்ளியாக மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியை

Literacy-to-the--poor-children-Govt-school-teacher-who-turned-the-house-into-a-school

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. இங்கே இணைய வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களுக்காக வீட்டையே பள்ளியாக மாற்றிவிட்டார் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம், க. மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ம. ஜெயமேரி. என்ன செய்தார் அவரிடமே கேட்டோம்.

"இந்த ஊரடங்கு நாட்களில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்குக் கற்பிக்க மாற்று வழி என்ன என்று யோசித்தபோது உருவானதுதான் அருகமைப் பள்ளி. தீப்பெட்டித் தாள் சுத்திக் கொண்டுள்ள குழந்தைகளில் பாதி, தீப்பெட்டி ஆபிசில் வேலைக்குப் போவதால் வெயிலில் சுற்றித் திரியும் குழந்தைகளை என்ன செய்வது? வீட்டுக்குப் பின்னே உள்ள அக்காவோ, தன் இரு பிள்ளைகளையும் இங்கே விட்டுவிட்டு தன் கணவரோடு வேலைக்குச் சென்றுவிடுவார்.

image

எனக்கு அவர்களை சும்மா விட மனசில்லை. எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு 2 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை பேஸ்புக் நண்பர் கனகராஜ், அளித்திருந்தார். முதலில் அருகில் உள்ளவர்களைப் படிக்கவைக்கலாமே என்று சுழற்சி முறையில் என் வீட்டுக்கு வரவழைத்தேன். கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி மற்றும் அதிகம்பேர் கூட வேண்டாம் என்பதால், 10 முதல் 12 பேர் வரை வரவழைத்தேன். முகக்கவசம் வழங்கி, சானிடைசர் பாதுகாப்பு , தனிமனித இடைவெளியுடன் வகுப்புகள் தொடங்கினேன்.

image

கதைகள் வாசிப்பு, படங்கள் வரைந்து அதில் இருந்து கதைகளை உருவாக்குதல், வார்த்தை விளையாட்டு, பாடல், நடனம் என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். பிள்ளைகள் மகிழ்ச்சியாக உணரத் தொடங்கினர். அவர்கள் எடுத்துச் சென்ற புத்தகங்களைப் படித்துவந்து அடுத்த வார வகுப்பில் தாமாகவே கதை சொன்னார்கள். ஒவ்வொரு வாரமும் நான் புதிய திட்டமிடலுடன் வகுப்புகளுக்குத் தயாராகிறேன். அது குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஊரடங்கு காலத்தில் கல்வி என்பது குழந்தைகளிடம் ஒரு ஏக்கமாகவே உள்ளது. வகுப்புகளுக்கு வர இயலாதவர்களுக்காக அவர்கள் வீடுகளுக்கும் சென்றுக் கொடுத்தேன். இணையவழி இல்லாவிட்டால் என்ன? இதயவழியில் இணைக்க நூல்கள் உள்ளதே...ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று நடக்கும் இந்த வகுப்பில் புதிய படைப்புகளைச் செய்துவருகின்றனர். ஓவியங்கள், பாடல் என்ற தயாரிப்பு டன் அவர்களாகவே ஆர்வமுடன் வருகின்றனர்.

image

நானும் இணைகிறேன் என்று எனது மகள் சந்தியாவும் குழந்தைகளுக்கு 4 கோடு நோட்டுகளி்ல் கர்சிவ் ரைட்டிங் எழுதப் பயிற்சி தருகிறாள். இது தவிர கொரோனா நோய்க்கிருமி காரணமாக, வாழ்வாதாரமின்றி தவிக்கும் எங்கள் பள்ளிக் குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று இரு மாதங்களாக உணவு வழங்கிவருவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

தற்போது அங்கு நோய்த் தொற்று பகுதியாக இருப்பதால் நேரடியாகச் செல்ல முடியவில்லை. ஒரு பெற்றோரின் உதவியின் மூலம், வறுமையில் வாடும் குழந்தைகள் 50 பேருக்கு அரிசி, 21 வகையான மளிகைச் சாமான்கள், முட்டைகள், பேரிச்சம்பழங்கள், பிரட் வகைகள் என வாரந்தோறும் கொடுத்துவிட்டு பசிப் பிணியாற்ற முயற்சி செய்துவருகிறேன்.

image

bharathisanthiya என்ற ஃபேஸ்புக் முகவரி வழியாக என் பதிவைப் பார்க்கும் முக நூல் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டி வருவது மனித நேயத்தின் உச்சம். துப்புரவுப் பணியாளர்களும், பட்டாசுத் தொழிலாளர்களுமாக உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு இந்த நெருக்கடியான நாட்களில் கிடைக்கும் உதவிகள் எனக்கு மன நிறைவைத் தருகின்றன" என்று நெகிழ்ச்சியுடன் பேசிமுடித்தார் ஆசிரியை ஜெயமேரி.

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்