[X] Close

வாசகர்களிடம் கைப்பிரதியாகச் சுற்றிவரும் கி.ரா.வின் புதிய நாவல்: பேராசிரியர் ஞானபாரதி பதிவு

சிறப்புச் செய்திகள்

Ke--Rajanarayanan-s--new-novel-circulating-manuscript-to-readers-Prof-Gnanabhari-s-Facebook-post

புதுச்சேரியில் வசிக்கும் கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணனைச் சந்தித்துப் பேசிய அனுபவத்தை திரைப்படச் செயற்பாட்டாளர் முனைவர் ஞானபாரதி, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு “எச்சரிக்கை: வயதும் மனமும் முதிர்ந்தவர்களுக்கு மட்டும் இந்தப் பதிவு” என்று தலைப்பிட்டுள்ளார். அண்மையில்  எழுதி அச்சுக்கு வராமல் கைப்பிரதியாவே தமிழ் வாசகர்களைச் சென்றடைந்துள்ள புதிய நாவலான 'அண்டரெண்டப்பட்சி'பிரதியை அவரிடம் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் கிரா. புதிய தலைமுறை இணையதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு…


Advertisement

image

தாத்தாவைப் பார்க்கப்போனது காந்தி பற்றிய ஒரு உரையாடல் தொடர்பாக. வேலை முடிந்து கிளம்பும்போது 'இந்தா இது உனக்குத்தான் படி!' என்று சுமார் நாற்பது பக்கங்கள் அடங்கிய கைப்பிரதி ஒன்றை நீட்டினார். 'அண்டரெண்டப்பட்சி' என்று தன் குழந்தைக் கையெழுத்தில் எழுதி நெளி நெளியாக கீழே அண்டர்லைன் பண்ணி.
“பைரன்னு ஒரு வெள்ளைக்காரக் கவிஞன் இருந்தான்ல? அவன் ஒருமுறை இப்படித்தான் கிளுகிளுப்பா ஒன்னை எழுதி முடிச்சிட்டு திரும்பிப் படிச்சப்போ… அடடா இத புத்தகமா அச்சடிச்சு விக்கமுடியாது போலயேன்னு சொல்லி தெரிஞ்சவங்ககிட்ட கொடுத்து இத ஆளாளுக்கு கையால எழுதிப் படிச்சுக்கங்க. வேணுங்கறவங்கள எழுதிக்கச் சொல்லுங்கன்னு சொல்லிக்கொடுத்தானாம்.


Advertisement

ஆனா அந்தப் பிரதி அச்சுப்பிரதியைவிட அதிகமா கைமாறி உலகம் முழுக்க நிறைய பேர்கிட்ட போய்ச் சேர்ந்துட்டு. இது அப்படித்தான். இந்த அண்டரெண்டப்பட்சி பிரிண்ட்டுக்கு வராது. படிச்சுட்டு ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு கொடுத்துடு. யாரும் கேட்டா இதேமாதிரி கொடுத்து வாங்கிக்க…” என்றார். மேலும், “அதைவிட முக்கியம் உன்னை மாதிரி படிச்ச பொண்ணுங்க இதப் படிக்கணும். ஆண் பெண் உறவு பற்றியதுதான் இது. ஆனா வெட்கப்படவேண்டியதில்ல. அந்தக் கல்வி வயசுக்கு வந்தவங்களுக்கே அவசியம்தானே” என்றார்.

கண்ணுக்கு முன்னால் ப்ரிண்ட் மீடியம் இறந்து டிஜிட்டல் மீடியம் மேலெழுந்து கொண்டிருக்கும் காலத்தில் தாத்தாவுக்கு எப்படி ஒரு அசாத்தியத் துணிவு பாருங்கள்.
இந்த 41 பக்க கைப்பிரதியில் ஆண் - பெண் உறவு பற்றிய புனிதங்களை அல்லி என்னும் இளவரசிக்கும் அண்டரெண்டப்பட்சி என்னும் புராணகாலப் பறவைக்கும் இடையிலான உரையாடல்போலப் பேசி உடைத்திருக்கிறார் தாத்தா. இடையிடையில் புதுமைப்பித்தன், தொ.மு.சி, கு. அழகிரிசாமியெல்லாம் வேறு ஆண் - பெண் உறவுகள் பற்றி அரட்டையடிக்கிறார்கள்.

image


Advertisement

நவதானியங்கள் அனைத்துமே பாலியல் ஊக்கிகளாக செயல்படுவது ஏன், பரிணாம மாற்றத்தில் மனிதர்கள் சிங்கப்பல்லை இழந்ததற்கும் காலவேளையில்லாமல் இனவிருத்தி செய்துகொண்டிருப்பதற்குமான தொடர்பு என்ன, சேவல்கள்தான் எப்போதும் கோழிகளை மிதிக்கின்றன, கோழிகள் ஏன் சேவல்களை மிதிப்பதில்லை? – என்றெல்லாம் கேள்வியும் பதிலுமாக தன் வழக்கமான கரிசல் மொழியில் சொல்லிச் செல்கிறார் தாத்தா. இடையில் தகரவீட்டு ரங்கமன்னாரின் கருப்புநிறப் பெண்டாட்டியின் களவுக்கதை ஒன்றையும் எழுதியுள்ளார்.

அண்டரெண்டப்பட்சி மூலம் நம்மைப்போன்ற பேரப்பிள்ளைகளுக்கு முத்தாய்ப்பாக தாத்தா சொல்லும் அறிவுரை இதுதான்: பறவைகளைப்போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அவை உண்ணும் தானியத்தைச் சேர்த்து வைப்பதும் இல்லை. செலவழிப்பதும் இல்லை. எறும்புகள், தேனீக்கள், கரையான்கள் இவை சேமித்து சேமித்துப் பறிகொடுக்கின்றன.

image

பறவைகள் திருமணம் செய்துகொள்வதில்லை. (இதை எழுதிய பிறகு 'ஆஹா, அருமையான முக்கியமான வாக்கியம் இது, இதுவேதான்' என்று அருகில் ஒரு அடைப்புக்குறியிட்டு குதூகலிக்கவும் செய்கிறார்)

எல்லாம் சரி. காந்தி பற்றி என்ன தாத்தாவுடன் திடீரென்று என்று கேட்கிறீர்களா- அது குறித்த ஒரு முழு வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது. அந்த வீடியோவில் சொல்லாத ஒரு செய்தி ஒன்றை நாங்கள் விடைபெறும் நேரத்தில் சொன்னார்: காந்தியை அரசியல்வாதியாகவோ மதவாதியாகவோ பார்க்கக்கூடாது. இதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

தாத்தாவுக்கு இப்போது வயது 98.


Advertisement

Advertisement
[X] Close