Published : 07,Aug 2020 07:49 PM
5 மாத பிஞ்சுக் குழந்தை கடத்தி கொலை.. காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட சடலம்

அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் 5 மாத குழந்தையை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை சோனாய் கஜிதஹார் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடத்தியுள்ளனர். கடத்தல்காரர்கள் ஜன்னல் பலகைகளை உடைத்து உள்ளே நுழைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை காலை தகவல் கிடைத்தவுடன் போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டனர். அன்று மாலையே மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், குழந்தையை கடத்திய உடனேயே கொலை செய்துவிட்டதாக ஒத்துக்கொண்டனர். மேலும் குற்றவாளிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் வியாழக்கிழமை இரவு காட்டுப்பகுதியிலிருந்து குழந்தையின் சடலம் மீட்டெடுக்கப்பட்டது.
கடத்தல்காரர்கள் விசாரணையை திசைதிருப்ப, குழந்தையை தேடுவதாக பல தொலைபேசி அழைப்புகளை செய்திருந்தனர். குற்றவாளிகளில் ஒருவர் தாய்வழி மாமா என்பதால் அவர்களுக்கு பணம் முக்கியமாக தெரியவில்லை எனவும், தனிபட்ட பகை காரணமாக இருக்கலாம் எனவும் குழந்தையின் தாயார் மீனா தெரிவித்துள்ளார்.
உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, கொலை, திருட்டு, அத்துமீறல் மற்றும் கடத்தல் காரணங்களுக்காக ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை தடுத்து வாகனங்கள் போக வழிவகை செய்துகொடுத்ததாக தெரிவித்தனர்.