Published : 26,Jun 2017 11:55 AM
மணிக்கு 400 கி.மீ. வேகம்... அசத்தும் சீன புல்லெட் ரயில்

சீனாவில் அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் புல்லெட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஃப்யூக்சிங் (Fuxing) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புல்லெட் ரயில், பயணிகள் நெரிசல் மிகுந்த பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடத்தில் இன்று முதல் பயணத்தைத் தொடங்கியது. சுமார் 1,318 கி.மீ. கொண்ட இந்த வழித்தடத்தை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புல்லெட் ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்ததாக சீன ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது. இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 400 கி.மீ. வேகத்திலும், சராசரியாக மணிக்கு 350 கி.மீ. வேகத்திலும் பயணிக்கும் திறன் பெற்றதாக சீனா தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் அவசரகாலங்களில் ரயிலின் வேகத்தை தானாகவே குறைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து புல்லெட் ரயிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.