Published : 06,Aug 2020 07:10 PM
டாஸ்மாக் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை - உயர்நீதிமன்றக் கிளை

டாஸ்மாக்கின் வருமானம் மூலம் அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், அவற்றை திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கோபால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி ஆண்டிபட்டி அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள மதுக்கடை மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் அருகில் உள்ள மதுக்கூடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அன்னை சத்யா நகர் பகுதியில் அமைந்துள்ள மதுக்கடை மற்றும் போதை மறுவாழ்வு மையம் அருகில் உள்ள மதுக்கூடத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. அத்துடன், டாஸ்மாக்கின் வருமானம் மூலம் அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், டாஸ்மாக் கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை என நீதிபதிகள் கூறினர்.
மேலும், மதுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா? அரசு நிர்ணயம் செய்த விலையில் தான் மது விற்கப்படுகிறதா? அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா ? என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தேனி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.