
முன்பெல்லாம் பெற்றோர்கள் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்தவுடன் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடுவது வாடிக்கையாக இருந்தது. அதனால் அலுவலக வேலையுடன் ஒப்பிடும்போது வீட்டுவேலை சற்றுக் குறைவாகத்தான் தெரிந்தது. ஆனால் இப்போது ஊரடங்கால் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
அதில் மிகவும் சிக்கலான விஷயம் என்னெவென்றால் குழந்தைகளுக்கும் பள்ளிகள் இல்லை. எனவே அனைவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் நிறைய பெற்றோர்கள் கம்ப்யூட்டர் முன்பே அமர்ந்திருப்பதால் குழந்தைகளின் சாதாரணப் பேச்சுக் கூட தொந்தரவாக தெரிகிறது. இதனால் கோபத்தை குழந்தைகள்மீது திருப்பி விடுகின்றனர்.
குழந்தைகளிடம் அன்பாக அவர்களை சாந்தமாக கையாள சில டிப்ஸ்...
குழந்தைகளுடன் விளையாடுங்கள்
குழந்தைகளுக்கு எப்படி ஆக்கப்பூர்வமாக நேரத்தை செலவிடுவது என கற்றுக் கொடுப்பதோடு நின்றுவிடாமல் பெற்றோர்களும் கூடவே சேர்ந்து நேரத்தை செலவிட வேண்டும். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளுக்கும் கண்டிப்பாக மன அழுத்தம் இருக்கும். அவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பும், வழிகாட்டலும் அவசியம். எனவே சிறிதுநேரம் குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
முக்கியத்துவம் கொடுங்கள்
குழந்தைகளுக்கு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ பற்றி புரிந்துகொள்ள முடியாது. வீட்டிலேயே இருக்கும் பெற்றோர்கள் அவர்களுடன் நேரம் செலவிடுவதில்லை என்று மட்டும்தான் நினைப்பார்கள். எனவே வேலை இருந்தாலும் அதை சிறிதுநேரம் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களுக்கென நேரத்தை அட்டவணைப்படுத்தி ஒதுக்குங்கள். ஒருநாளில் இரண்டு வேளையாவது அவர்களுடன் அமர்ந்து சாப்பிடப் பழகுங்கள்.
குடும்பத்தின் மகிழ்ச்சி முக்கியம்
சோஷியல் மீடியாக்களில் வரும் அனைத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தினமும் ஆயிரக்கணக்கான கதைகள் வந்துகொண்டுதான் இருக்கும். அதேபோல் நாமும் இருக்கவிரும்பினால் அது நடக்காத காரியம். ஒரு நாளின் முடிவில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே நமக்கு தேவை. எனவே உங்களால் முயன்றதை செய்யுங்கள்.
நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுங்கள்
இந்த ஊரடங்கு காலம் பெற்றோருக்கு குழந்தைகளை நல்வழிப் படுத்த சிறந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு தங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பில்லை. எனவே பெற்றோர்கள் அவர்களின் பழக்கவழக்கங்களை கண்காணித்து அவர்களை சிறந்த நபராக உருவாக்கலாம்.
உங்களிடம் நீங்களே பணிவாக நடந்துகொள்ளுங்கள்
வீட்டில் வளர் இளம்பருவத்தில் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் ஒரு முன்னுதாரணமாக விளங்கவேண்டும். நல்ல தூக்கம், உடற்பயிற்சி, சிறந்த உணவு மற்றும் அன்பாக நடந்துகொள்ளும் விதம் போன்ற இவைதான் குழந்தைகளையும் உங்களைப்போல இருக்கவேண்டும் என யோசிக்கவைக்கும்.
குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களாக மாறிவிடுங்கள்.