Published : 03,Jan 2017 05:34 AM
நாளை திமுக பொதுக்குழு... மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி..?

திமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளராக இருக்கும் மு.க ஸ்டாலினுக்கு செயல்தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திமுகவில் இதுவரை இல்லாத இத்தகைய பதவியை உருவாக்க கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம். அதற்கான வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்..
திமுகவைப் பொறுத்தவரையில் மாநில அளவில் ஒரு புதிய பதவி உருவாக்கப்பட வேண்டுமெனில், அந்தப்பதவியை முதலில் பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். அதனை பொதுக்குழு உறுப்பினர்கள் விவாதித்து கட்சி விதியில் மாற்றம் கொண்டு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் அந்தப் பதவிக்குரியவரைத் தேர்தல் வாயிலாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திமுகவைப் பொறுத்தவரையில் அதிக அதிகாரம் கொண்டது பொதுச்செயலாளர் பொறுப்பாகும். ஒருவரைக் கட்சியில் இருந்து நீக்குவது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தைக் கூட்டுவது உள்ளிட்டவை பொதுச்செயலாளரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. இருப்பினும் கட்சி விதிகளின் படி இத்தகைய விஷயங்களில் கட்சித் தலைவரின் ஆலோசனையைப் பெற்றே செயல்பட வேண்டும். எனவே நாளை நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் செயல்தலைவர் பதவி குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.