Published : 05,Aug 2020 10:49 AM
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிஷா, மேற்குவங்கம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கோவா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளில் இன்றும் நாளையும் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா, தமிழகம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.