
வீரர்கள் போலி வயது சான்றிதழ் சமர்ப்பித்தால் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட தடை செய்யப்படுவார்கள் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
வயது மற்றும் குடியேற்ற மோசடிகளை கட்டுப்படுத்த பி.சி.சி.ஐ. சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. அதில்,’’கடந்த காலங்களில் வயது மோசடியில் ஈடுபட்ட வீரர்கள் தாமாக முன்வந்து தவறை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாட்டார்கள்.
மோசடியில் ஈடுபட்டதை நிர்வாகமே கண்டுபிடித்தால் இரண்டு ஆண்டுகள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும். இரண்டாண்டுகளுக்குப் பின் மாநில அணி மற்றும் தேசிய அணிக்கும் விளையாட முடியாது.
உண்மையான பிறந்த தேதி குறித்த சரியான ஆவணங்களை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 16 வயதுக்குட்பட்ட வயதினருக்கான போட்டிகளில், 14-16 வயதுக்குட்பட்ட வீரர்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். குடியேற்றம் தொடர்பான மோசடிக்கு பொது மன்னிப்பு கிடையாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட் கூறும்போது, ‘’வயது மோசடி என்பது ஒரு தீவிரமான விவகாரமாக எடுத்துள்ளோம். இது விளையாட்டின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
வயது மோசடியால் பல வீரர்கள் வாய்ப்புகளை இழக்கிறார்கள். இதுகுறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவுள்ளதால் வயது மோசடியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தானாக முன்வந்து தங்கள் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்றார்.