Published : 26,Jun 2017 02:19 AM
ரஹானே சதம், குல்தீப் கதம்: எளிதாக வென்றது இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாவது ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. மழையால் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய ஆட்டம், 43 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் ஷிகர் தவானும், ரஹானேவும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 114 ரன்களாக இருந்த போது, தவான் 63 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து கேப்டன் விராத் கோலி இறங்கினார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, தனது 3வது சதத்தை நிறைவு செய்து அவுட்டானார். அவர் 103 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களிலும் யுவராஜ் சிங் 14 ரன்களிலும் வெளியேறினர். நிலைத்து நின்று ஆடிய கோலி 87 ரன்கள் எடுத்து ஜோசப் பந்தில் கேட்ச் ஆக, தோனியும் ஜாதவும் தலா 13 ரன்களை எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 310 ரன்கள் எடுத்தது.
311 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்த வண்ணம் இருந்தன. இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. ஹோப் 81, கேப்டன் ஹோல்டர் 29, பந்து வீச்சாளர் சேஷ் 33 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை கதம் செய்தார். ரஹானே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.