Published : 03,Aug 2020 01:33 PM
திரைப்பட படப்பிடிப்பு, திரையரங்கு திறக்க இப்போது வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்கு திறக்க அனுமதி அளிக்க தற்போது வாய்ப்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திரைப்பட படப்பிடிப்பு அனுமதி கோரி திரைப்படத்துறையினர் என்னையும், தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது. 60 பேர் இருந்தாலே போதும்.
ஆனால் திரைப்பட பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும். அந்த பகுதியில் பார்வையாளர்கள் கூட்டம் கூடும். அதுதவிர திரைப்பட படப்பிடிப்பு நடத்த பல்வேறு அனுமதி வாங்கவேண்டியுள்ளது. அதனால் இப்போதைக்கு அனுமதிக்க இயலாது. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.
திரையரங்கு திறப்பு குறித்து மத்திய அரசு இதுவரை முடிவு சொல்லவில்லை. எனவே இந்த மாதம் திரையரங்கு திறக்க திறக்கவாய்ப்பில்லை” என்றார்.