[X] Close

3 சென்ட் நிலத்தில் அடர்வனம்.. சாதித்துக் காட்டிய சூழலியாளர்!

சுற்றுச்சூழல் & சுகாதாரம்

Kerala-Man-Grows-400-Tree-Forest-in-3-Cents-of-Land

கேரள மக்கள் பெரும்பாலும் பசுமையான மற்றும் வயல்வெளிகள் நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளில்தான் வாழ்ந்திருப்பர். எம்.ஆர். ஹரியும் அப்படித்தான் வளர்ந்தார். கோட்டயத்தில் இருந்த அவரது பூர்வீக வீட்டைச்சுற்றி ஏராளமான பழ வகை மரங்களும் மருத்துவக் குணம் கொண்ட செடி கொடிகளும் சூழ்ந்து இருந்தன.


Advertisement

90களில் படிப்பிற்காக திருவனந்தபுரம் சென்றபோது நகரமயமாக்கலின் பாதிப்பினால் பசுமைப்பரப்பு குறைந்து வருவதை கண்ணால் பார்த்தவர் அதை காக்கும் பொருட்டு சமூக நல இயக்கங்களுடன் சேர்ந்து போராடியும் இருக்கிறார். இருந்தாலும் தற்போது தான் தன்னால் இயன்ற முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தவர், 3 சென்ட் நிலத்தில் 400 மரங்களைக் கொண்ட ஒரு குறு அடர்வனத்தை உருவாக்கி சாதித்திருக்கிறார் ஹரி.  

imageஅவரிடம் பேசியபோது,


Advertisement

''நகரங்களில் காடுகளை உருவாக்குவது முடியாத காரியம். எங்களது பூர்வீக இடத்தையும் நாங்கள் விற்றுவிட்டோம். எனவே திருவனந்தபுரத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இருக்கும் புலியரகோணம் கிராமத்தில் இருக்கும் எனது நிலத்தில் மரங்களை நட ஆரம்பித்தேன்.

ஆனால் அது மிக கடுமையான நடைமுறையாக இருந்தது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியான நிலம் ஆகிய காரணங்களால் மூன்று முறை நான் நட்ட மரக்கன்றுகள் பட்டுப் போயின. 12 நாட்டு மாடுகளை வாங்கி அவற்றை 2 ஏக்கர் நிலத்தில் மேய விட்டு மண்ணின் தரத்தை உயர்த்தினேன். காய்ந்த மாட்டு சாணம் மிகவும் உதவியது.

மரம் நடுவதை பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தபோது தான் ஜப்பான் நாட்டின் தாவரவியல் விஞ்ஞானி அகிரா மியாவாக்கி கண்டறிந்த மியாவாக்கி முறையில் காடுகள் வளர்ப்பது பற்றி அறிந்தேன். .


Advertisement

மியாவாக்கி முறையில் மரம் நடுவது என்பது மரங்கள் பத்து மடங்கு அதிக வேகத்திலும் இயற்கையாக வளரும் காடுகளை விட முப்பது மடங்கு அதிக அடர்த்தியாகவும் காடுகளை வளர்க்கும் முறை. இதில் மரக்கன்றுகளை மிகவும் நெருக்கமாக நட்டு வளர்து சூரிய ஒளி தரையில் படாமல் மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருப்பதுபோல் பாரத்துக்கொள்ளப்படும். அதேபோல் மரங்களை கிடைமட்டமாக வளராமல் செங்குத்தாக வளர்க்கப்படும்.

இம்முறையில் வளர்க்கப்படும் மரங்கள் இயல்பாக வளர்க்கப்படும் மரங்களைவிட பலமடங்கு அதிகமாக கரியமில வாயுக்களையும் மாசுக்களையும் குறைக்கும் வல்லமை கொண்டது. அதேபோல் பசுமையான சூழலும் அதிகமாகும்.

என்னுடைய மூன்று சென்ட் (ஒரு சென்ட் என்பது தோராயமாக 435.60 சதுர அடி) நிலத்தில் 400 வகையான பழம், காய்கறி, வகைகளும் மற்றும் மருத்துவ வகை மரக்கன்றுகளும் நட்டேன். கடந்த ஒன்றரை வருடங்களில் இந்த காடு 15 அடி உயரம் வரை வளர்ந்து 35 வகையான பூச்சியினங்களுக்கு வீடாகியுள்ளது. இன்னும் பத்து வருடங்களில் என்னுடைய காடு நூறு வருட பழமையான காடு போன்று மாறிவிடும்

முதல் மூன்று வருடங்கள் மட்டுமே பராமரிக்க வேண்டும். பின் இரண்டு வருடங்களில் காடு முழுவதுமாக வளர்ந்து தன்னிறைவை அடையும். இக்காட்டில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை குறிப்பிட்ட இடைவெளியில் பறித்துவிடுவோம். விடுமுறை நாட்களில் என்னுடன் வேலை பார்க்கும் ஊழியர்களும், நண்பர்களும் வந்து உதவி செய்கிறார்கள். ஒரு காலத்தில் வறட்சியான பாலைவனம் போல் காட்சியளித்த நிலம் தற்போது பசுமை பரப்புடன் விளங்குகிறது.

பாரம்பரியமான மருந்து வகைகளான ஆடலோடகம், சங்கலம் பிரண்டை, அம்பாழம், நீர்மத்தளம், அம்ருதவள்ளி மற்றும் தாணி போன்ற செடிகளும் இங்கே வளர்கிறது’’ என்கிறார் அவர்.

ஹரியின் வெற்றிக்கதையை அறிந்து கேரள அரசாங்கம் கனாகக்குன்னு அரண்மனை வளாகத்தில் மரம் வளர்க்க அழைத்திருக்கிறது. இயற்கையின் பசுமை காவலர்கள் அமைப்புடன் இணைந்து ஐந்து சென்ட் நிலத்தில் 60 வகைகளில் 800 மரக்கன்றுகளை ஆறு மாத காலத்தில் நட்டுள்ளார். இதேபோல் பேயாடு மற்றும் முன்னாரிலும் காடுகளை வளர்த்துள்ளார். 

imageதன்னைப்போல ஆர்வம் உடையவர்களையும் இணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஹரியினால் கவரப்பட்டு அவரைப்போல் 50 பேர் மியாவாக்கி முறையில் காடுகள் வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

‘’கேரளாவில் பெரும்பாலும் மக்கள் வீடு கட்டுவதற்காக 5 முதல் 6 சென்ட் வரை நிலம் வாங்குவர். என்னுடைய வேண்டுகோள் யாதெனில் அதில் இரண்டு சென்ட் நிலத்தை மியாவாக்கி காடு வளர்க்க ஒதுக்கிவிடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு வீட்டைச்சுற்றி தூய்மையான காற்றும் குளிர்ச்சியான சூழலும் ஏற்படும். சுற்றுச்சூழலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3,000 மரங்களுக்கு மேல் நட்டதற்கு தன் குடும்பத்தாரையே காரணமாக சொல்கிறார். குறிப்பாக அவரது 87 வயது தாயைப் பற்றி கூறும்போது, ‘’எனது மரம் வளர்க்கும் ஆர்வம் எனது தாயிடம் இருந்தே எனக்கு வந்தது. தற்போதுவரை அவர்கள் தன் வீட்டில் மரம் நட்டு வளர்த்து வருகிறார். முந்தரி, பலா போன்ற மரங்களும் நட்டு வளர்த்தோம் என் தாயினால்தான் நான் இயற்கையின் மீது அக்கறையோடு இருக்கிறேன்.

என்னுடைய பால்ய காலத்தில் பெரும்பாலும் எங்கள் வீட்டைச்சுற்றி இருக்கும் மரங்களில் விளையாடிக்கொண்டிருப்போம். பனை மரங்கள் நிறைய இருந்ததால் நிறைய பறவைகளும், கோவில் யானையும் கூட எங்களின் வீட்டின் அருகில் பார்க்க முடியும். எங்கள் வீட்டில் யாருக்கேனும் உடல்நலம் சரியில்லை என்றால்கூட வீட்டைச்சுற்றி இருக்கும் மருத்துவ செடிகளில் இருந்து இலைகளைப் பறித்து வாயில் போட்டுக்கொள்வோம். 

எங்களின் விருந்தோம்பலில் விருந்தினர்களை வெறுங்கையோடு திருப்பி அனுப்பும் பழக்கம் கிடையாது. எனவே எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் மற்றவர்களுக்கும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவோம். அதுபோலவே நாங்கள் யார் வீட்டிற்கு சென்றாலும் அவர்களுக்கும் வழங்குவோம்’’ என்று கூறும் ஹரி தற்போது மாநில அரசோடு இணைந்து மறுபடியும் கைகோர்த்து 12 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். 


Advertisement

Advertisement
[X] Close