[X] Close

"விமர்சனங்களுக்கு திறமையால் பதில் சொன்னவர்”-ட்ரெண்டை மாற்றிய தனுஷின் பிறந்தநாள் இன்று.!

சினிமா

Actor-Dhanush-birthday-special

தனது அசாத்திய நடிப்பாலும் பன்முகத் திறமைகளாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்து வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் தனுஷும் ஒருவர். இவரது பல டயலாக்குகளும், ‘ஒய் திஸ் கொலவெறி’, ‘ரௌடி பேபி’ போன்ற பாடல்களும் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் வரிசையில் மிகவும் ஃபேமஸ். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் போன்ற பல முகங்கள் இவருக்கு இருக்கிறது.

image

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனான தனுஷ், 2002ஆம் ஆண்டு வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார். தனுஷின் அண்ணன் இயக்குநர் செல்வராகவன் தனது முதல் படத்தை தன் தம்பியை வைத்தே எடுத்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடித்த ’காதல் கொண்டேன்’ படமும் அமோக வெற்றி பெற்றதால் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார். அடுத்தடுத்து வெளிவந்த ‘திருடா திருடி’, ’தேவதையைக் கண்டேன்’ போன்ற படங்கள் தனுஷை ஒரு சிறந்த நடிகராக உருவாக்கியது.


Advertisement

‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ’சுள்ளான்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘பொல்லாதவன்’, ‘யாரடி நீ மோகினி’, ’படிக்காதவன்’, ‘ஆடுகளம்’, போன்ற மெகா ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.

image
’’நான் பாக்குறதுக்குத்தான் சுள்ளான்... இப்ப பாருடா!’’, ’’கொக்கி குமாரு’’, ‘’என்ன மாதிரி பசங்கள பாத்தவொடனே பிடிக்காது. பாக்க பாக்கத்தான் பிடிக்கும்’’, ’’செஞ்சுருவ’’ போன்ற பல டயலாக்குகளை தனது படங்களில் வைத்து சுமாரான பசங்கதான் கெத்து என எல்லா இளைஞர்களுக்கும் ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்தவர் தனுஷ்.

தனது அபார நடிப்பால் ‘ஆடுகளம்’ படத்திற்கு தேசிய விருதும் இவருக்குக் கிடைத்தது. அதன்பிறகு ‘மாப்பிள்ளை’, ’வேங்கை’, ‘மயக்கம் என்ன’ போன்ற வெவ்வேறு கேரக்டர்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.  ‘மரியான்’, ‘அனேகன்’, ‘கொடி’, ‘மாரி’, ‘வேலையில்லா பட்டதாரி’, ’வடசென்னை’ போன்ற படங்கள் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றன.

image

தழில் சினிமாவில் கலக்கிய அவருக்கு 2013-ல் ‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் கால் பதிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. சோனம் கபூருடன் இணைந்து நடித்திருந்த அந்த படம் ‘பாக்ஸ் ஆபீஸ் ஹிட்’ படமாக வெற்றிபெற்றது. படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், தன்னை ஒரு பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் மக்கள் மனதில் நிலைநிறுத்திக்கொண்டார்.

பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

image

ஆரம்பத்தில் இவருடைய தோற்றம் பற்றி பலபேர் கிண்டல் செய்தனர். மேலும் ஆங்கிலமே தெரியாது என பல மேடைகளில் இவர் கூறியிருந்தாலும், சமீப காலங்களில் ஆங்கிலத்தில் சரளமாக விளையாடுகிறார். அவருடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி பேசும்போது, தனது அண்ணன் செல்வராகவன்தான் தன்னை ஒரு நடிகராக உருவாக்கியிருப்பதாக கூறுகிறார். தனிப்பட்ட வாழ்வில் தனது மனைவி ஐஸ்வர்யாதான் தனக்கு பக்கபலமாக இருந்து, தன்னை வழிநடத்துவதாக கூறுகிறார்.

தேசியவிருது, தென்னிந்திய திரைப்பட விருது, பிலிம்ஃபேர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு வயது 37. இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close