
உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டிலிருந்து 57 வயது நோயாளி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை தப்பியுள்ளார். தப்பிய அந்த நோயாளியின் சடலம் அந்த மருத்துவமனைக்கு பக்கமுள்ள புதர் ஒன்றிலிருந்து மறுநாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் அலட்சிய போக்குதான் அவரது மரணத்திற்கு காரணம் என உயிரிழந்த நோயாளியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழந்த நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து தப்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், சனிக்கிழமை காலை நோயாளி தன் குடும்பத்தினரிடம் போனில் பேசியுள்ளார். "இரவு முழுவதும் என் நாக்கு வறண்டு இருந்தது. வென்டிலேட்டர் காரணமாக நான் மூச்சுத் திணறலையும் உணர்ந்தேன். இங்கு இருந்த சிலரிடம் உதவும்படி நான் கேட்டேன், ஆனால் யாரும் உதவிவில்லை” என அவர் சொல்லியுள்ளார்.
அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன.
“கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் இங்கிருந்து தப்பிவிட்டார். அவர் தப்பித்த விவரத்தை போலீசில் சொல்லி, தேடவும் வலியுறுத்தினோம்” என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.