[X] Close

’ஒய் திஸ் கொலவெறி’, ’ரவுடி பேபி’.. விநோத வார்த்தைகளும், குழந்தைகளின் உளவியல் சிக்கல்களும்

சிறப்புச் செய்திகள்

Why-children-s-mind-captures-the-strange-words-Psychologist-talks

ஜென்டில்மேன் படத்தில் பிரபலமான “சிக்குபுக்கு ரயிலே அட கலக்குது பாரு இவ ஸ்டைலு…” என்ற பாடலை குழந்தைகளும் பாடிக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு திரைப்பாடலோ, ஒரு சொல்லோ ஹிட்டாகும். பாடல்களில் வெளிப்படும் ஏதோ ஒரு மொழியின் பொருளற்றச் சொற்களும் இளம்பிஞ்சுகளுக்குப் பிடித்துவிடுகின்றன. ஏன் அதுபோன்ற பாடல் வரிகளும் விநோதமான வார்த்தைகளும் குழந்தைகளின் மனதில் நிற்கின்றன என்பது ஓர் உளவியல் கேள்வி. இதுபற்றிப் பேசுகிறார் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி உளவியல்துறை துணைப் பேராசிரியர் லாவண்யா ஆதிமூலம்.  


Advertisement

image 

“அதாவது குழந்தைகள் பிறக்கும்போதே உலகில் உள்ள மொழிகளில் கிட்டத்தட்ட நூற்றைம்பது வகையான சப்தங்களைக்  கேட்கவும் உருவாக்கவும் முடியும். ஒன்றரை வயது வரைக்கும் இருபது வார்த்தைகளை  கற்றுக்கொண்ட  குழந்தை, இரண்டாவது வயதில் சுமார் 200 முதல் 300 வார்த்தைகளைத் தெரிந்துகொள்கிறது. 


Advertisement

மூன்றாம் வயதில் 900 முதல் 1000, நான்காம் வயதில் 1500 முதல் 1600, பால்வாடி படிக்கும்போது சுமார் 2 ஆயிரம், பன்னிரண்டாம் வயதில் 50 ஆயிரம் வார்த்தைகளைக் கற்கும் அளவிற்கு அவர்களின் மூளை அதிக வளர்ச்சியை அடைகிறது. இசையோடு சேரும்போது கற்றல் மிகவும் எளிமையாகிறது. தாலாட்டுப் பாடல் முதல் ரைம்ஸ், திரைப்பாடல்கள் வரையில் குழந்தைகளின் மொழித்திறனை வளர்க்க இசையின் பங்களிப்பு  மறுக்கமுடியாதவை. அதிலும் திரைப்படப்பாடல்கள்   அதிக   ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. 

image

தங்கிலீஷ் மற்றும் பிற மொழிகள் கலந்த பாடல்கள் தனிக் கவனத்தை உருவாக்குகின்றன. டீன்ஏஜ்  ஃட்ரெண்ட் எனச் சொல்லக்கூடிய அர்த்தமில்லா சொற்களின் ஈர்ப்பும் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ஒருவகையில் அவர்களின் மொழித்திறன் வளர்ந்தாலும், சில இடங்களில் வயதுக்கு மீறிய சில தகாத சொற்களையும் தெரிந்துகொள்கிறார்கள்.


Advertisement

இதுபோன்ற சொற்களைக் கொண்ட பாடல்கள் அவர்களின் மனநலத்தையும் பாதிக்கும். வயதுக்கு மீறிய  பேச்சும், பெரியவர்களே அதிர்ந்துபோகும் அளவுக்கு சில தகாத சொற்களை குழந்தைகள் பேசும்போது, எங்கிருந்து இதை கற்றார்கள் என்று நாமே வியக்கிறோம் அல்லவா.

image

உலகமே சிறு கைபேசியிலும்,  கணினியிலும், டிவியிலும் அடங்கும்போது அவற்றில் அதிக நேரத்தை குழந்தைகள் செலவிடுகின்றன. தனது அதீத மூளைத்திறன் இருக்கும் சமயத்தில் கற்கும் வார்த்தைகள் வாழ்க்கையின் நெறிமுறைகளை மாற்றும் அளவிற்கு அதிக சக்தி உடையவை. 

image

எனவே பெற்றோர்கள் அதிக கவனத்துடன் குழந்தைகளைக் கவனிக்கவேண்டும். அவர்கள் பார்க்கும் கேட்கும்  விஷயங்களில் நல்லது கெட்டதை ஆராய்ந்து கண்காணிப்பில் வைத்து பார்த்துக்கொள்வது அவசியம். சமூகப் பொறுப்புணர்வுடன் திரையுலகினரும்  பாடல்களில் உள்ள சொற்களின் விளைவுகளை கருத்தில்கொண்டு எழுதும்போது வளரிளம் சமூகம் நல்வழியில் செல்லும் என்பதில் சந்தேகமில்லை” என்கிறார்.

சுந்தரபுத்தன்


Advertisement

Advertisement
[X] Close