Published : 24,Jul 2020 07:07 AM
சூரி, விமல் கொடைக்கானல் சென்ற விவகாரம் : 2 வனக்காவலர்கள் பணியிடைநீக்கம்

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குள் அனுமதியின்றி சென்ற நடிகர்கள் சூரி, விமலுக்கு உதவி புரிந்த வனக்காவலர்கள் இருவரை பணியிடைநீக்கம் செய்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி மற்றும் விமல் ஆகியோர் கடந்த வாரம், கொடைக்கானல் சென்று தங்கியுள்ளனர். பின்பு வனத்துறை அலுவலர்களின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்குச் சென்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. தகவல் அறிந்த வனத்துறையினர் விசாரணை செய்து, அபராதம் விதித்த பின்பு இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்தின் அடிப்படையில், மகேந்திரன் என்பவர் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறுகையில் ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் இருவரும் எப்படி கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்தனர் என்றும், தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக எவ்வாறு அவர்கள் பேரிஜம் ஏரிக்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பேரிஜம் ஏரிக்குள், அனுமதி இன்றி சென்ற சூரி மற்றும் விமலிற்கு உதவி புரிந்த வனக்காவலர்கள் சைமன் பிரபு மற்றும் செல்வம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.