கேப்டன் கோலியின் நம்பிக்கை நட்சத்திரமான சாஹலின் பிறந்த நாள் சிறப்பு பதிவு..!

கேப்டன் கோலியின் நம்பிக்கை நட்சத்திரமான சாஹலின் பிறந்த நாள் சிறப்பு பதிவு..!
கேப்டன் கோலியின் நம்பிக்கை நட்சத்திரமான சாஹலின் பிறந்த நாள் சிறப்பு பதிவு..!

பிப்ரவரி 1, பெங்களூரு : இந்தியா மற்றும் இங்கிலாந்துடனான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை என்பதை தீர்மானிக்கும் டிசைடர் மேட்ச். டாஸை வென்ற இங்கிலாந்து, பேட்டிங் பிட்சான பெங்களூரு மைதானத்தில் சேஸிங் செய்வது எளிது என பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 202 ரன்களை குவித்தது. அடுத்ததாக விளையாட இறங்கிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் தனது சிறந்த பவுலிங் ரெக்கார்டை உருவாக்கினார் இந்திய கிரிக்கெட்டின் லெக் ஸ்பின்னர் யேஷ்வேந்திர சாஹல். அவருக்கு இன்று பிறந்த நாள்.

கேப்டன் கோலியின் நம்பிக்கை நட்சத்திரமான சாஹல் செஸ், கிரிக்கெட் என இரு விளையாட்டிலும் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் தடம் பதித்தவர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த யேஷ்வேந்திர சாஹல் 1990இல் பிறந்தார். பள்ளி பருவம் வரை செஸ் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தார். டீன் ஏஜில் சர்வதேச அளவிலான செஸ் சாம்பியன்ஷிப், அண்டர் 13 ஆசிய போட்டி, தேசிய அளவிலான போட்டி என அனைத்திலும் சாஹல் பங்கேற்றுள்ளார். 2003இல் தேசிய ஜுனியர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றவர் அவர். ஒரு கட்டத்தில் முறையான ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்காததால் செஸ் விளையாட்டை கைவிட்டார். 

அதுவரை இண்டோரில் செஸ் விளையாடியவர் பிறகு நண்பர்களோடு இணைந்து அவுட்டோரில் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். ‘நீ நல்லா பந்தை ஸ்பின் பண்ற’ என நண்பர்கள் சொல்ல அந்த வார்த்தைகளை நம்பி கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்தினார் சாஹல். பள்ளி, வட்டம், மாவட்டம், மாநிலம் என படிப்படியாக கிரிக்கெட்டில் அசத்தியவருக்கு 2009-ல் தான் முதல் தர போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. சீனியர் சுழற் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்ததால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் சப்ஸ்டிட்யூட் பிளேயராக சில ஆண்டுகளை கழித்தார். 

வாய்ப்புக்காக சாஹல் ஏங்கிய சமயத்தில் தான் ஐபிஎல் தொடருக்கான 2011 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. முதல் மூன்று சீசனில் சீனியர் ஹர்பஜன் சிங் இருந்ததால் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலை. சாம்பியன்ஸ் கோப்பை டி20 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி, சீரான எக்கானமி ரேட்டில் ரன்களை கொடுத்து, விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதன் விளைவாக 2014 சீசனில் பெங்களூரு ஆர்.சி.பி அணிக்காக சாஹல் தேர்வானார். 

சுழல் ஜாம்பவான் கும்ப்ளேவின் ஆலோசனைப்படி சிறப்பாக பந்து வீசி 10 விக்கெட்டுகளை சாஹல் கைப்பற்றினார். தொடர்ந்து 2015 ஐபிஎல் சீசனிலும் சிறப்பாக பந்து வீசி 20 விக்கெட்டுகளை கைப்பற்றி கேப்டன் கோலியின் செல்ல பிள்ளையாக சாஹல் இணைந்தார். 

இருந்ததாலும் சீனியர் ஸ்பின்னர்களான அஸ்வின், மிஸ்ரா போன்றவர்களுக்கு ஓய்வளிக்கப்படும் போட்டிகளில் மட்டுமே சாஹல் இந்தியாவுக்காக ஆடும் பதினோரு வீரர்களில் இடம் பிடித்தார். 2016இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சாஹல் அறிமுக வீரராக களம் கண்டார். சீனியர் ஸ்பின்னர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் சாஹலுக்கு அந்த தொடரில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது. சாஹல் தனக்கு கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசினார்.

அவரது கேரியரை மாற்றி அமைத்தது 2017-இல் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி. பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு ஆடுகளத்தில் இரண்டாவது ஓவரிலேயே ஸ்பின் பவுலிங் செய்து விக்கெட்டை வீழ்த்தினார் சாஹல். அந்த போட்டியில் தனக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்கும் போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டே இருக்க 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். ஒரே டி20 போட்டியில் 25 ரன்கள் கொடுத்து 6 விக்கட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் சாஹல் அந்த போட்டியில் படைத்தார். அதன் பிறகு இந்திய டி20 அணியன் ஆஸ்தான பவுலரானார் சாஹல்

இதுவரை அவர் விளையாடிய 42 சர்வதேச டி20 போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பவுலிங் ஆவரேஜ் 22.53. இந்தியாவுக்காக 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அண்மை காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் லெக் ஸ்பின்னர்களை அவசியம் அணியில் இடம்பிடிப்பதை உறுதிப்படுத்தி வருகின்றன. இந்திய அணியின் ஷார்ட்டர் பார்மட் கிரிக்கெட் அணி தேர்வில் பிரதான லெக் ஸ்பின்னராக இடம் பெறுபவர் சாஹல் தான். அதற்கு காரணம் பந்து வீச்சில் அவர் காட்டும்  வெரைட்டி. பேட்ஸ்மென் ஒரு பந்தை அடித்தால் அடுத்த பந்திலேயே விக்கெட் வீழ்த்தும் அளவுக்கு பந்து வீச்சில் வெரைட்டி காட்டும் திறன் கொண்டவர் சாஹல்.

ஹேப்பி பர்த் டே….

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com