Published : 21,Jul 2020 04:07 PM

”திமுக இந்து விரோத கட்சியல்ல. யார் ‘இந்து’ என்பதில்தான் பிரச்சனை” -ஆ.ராசா சிறப்பு பேட்டி

The-DMK-is-not-an-anti-Hindu-party--The-problem-is-who-is-a----Hindu-----A-Rasa-Special-Interview

 கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் கந்த சஷ்டி கவசம் சர்ச்சையில்  ’தி.மு.க இந்து விரோத கட்சி’ என்று பா.ஜ.கவினரும், ’தி.மு.கவை இந்து விரோதியாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது’  என்று தி.மு.கவினரும் மாறி மாறி அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தி.மு.கவில் ஆளுமையான தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் ஆ.ராசா எம்.பியிடம் இப்பிரச்சனை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டப்போது,  புதிய தலைமுறை இணைய தளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். 

image

கந்தசஷ்டிகவசம்சர்ச்சையில்தி.மு.கறுப்பர்கூட்டத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறதே?

இந்த பிரச்சனையில் தி.மு.கவிற்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை எங்கள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒரு வலைதளக் காட்சியில் சம்பந்தப்பட்ட கறுப்பர் கூட்டத்தின் நிர்வாகி ஒருவரே தங்கள் நிலைப்பாட்டிற்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று வாக்குமூலம் அளித்திருக்கின்றார். இது, சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து நகர்த்தப்படும் அருவருப்பான அரசியல்.  திமுகவின் தலைவர் பெயரிலேயே ட்விட்டரில் ஒரு போலி கணக்கைத் தொடங்கி, பொய் பிரச்சாரம் செய்ததிலிருந்தே இதற்குப் பின்னால் இயங்கும் காவி அரசியலை விளங்கிக்கொள்ள முடியும்.  என்னை பொருத்தவரை கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்; இந்த மாதிரி வக்கிரத்தனமான அரசியல் கூடாது.  ஒரு கருத்திற்கு தன் எதிர் கருத்தால் தெளிவு ஏற்படுத்த இயலாதவர்களின் இழிச்செயல்கள் இப்படி அரங்கேறுவது கண்டனத்திற்குரியது.

அப்படியென்றால், தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலின் ஏன்அமைதிகாக்கிறார் ?

ஒரு இயக்கத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் – எல்லா விமர்சனங்களுக்கும் தலைவரே கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.  அது பிரச்னையின் தன்மை பேசுபவரின் திண்மை குறித்தே அமையும். அமைப்புச் செயலாளரின் விளக்கம் போதுமானது என்று கருத அவருக்கு உரிமை உள்ளது. அது, அமைதி காப்பதாக அர்த்தமாகாது.

image

 தி.மு.இந்துவிரோதகட்சிஎன்றுதொடர்ந்துபரப்பப்பட்டுவருவதைஎப்படிபார்க்கிறீர்கள்? தி.மு.இந்துமக்களுக்குஎன்னசெய்துள்ளது?

தி.மு.க ‘இந்துக்கள்’ என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாக விளங்கும் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்குமான உரிமை மீட்பு இயக்கம். தன் வாழ்நாளுக்குள்ளாகவே, தமிழ் நாட்டளவிலாவது இம்மக்களுக்கு சூத்திர பட்டமும், பஞ்சம பட்டமும் ஒழிய வேண்டும் என்று தன்னலமற்று போராடியவர் தந்தை பெரியார்.  பெரியாரின் எண்ணப்படிதான் காமராஜர் ஊரெங்கும் பள்ளிக்கூடங்களை திறந்தார்.  பின்னர், கலைஞர் கல்லூரிகளை திறந்து, சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் ஆக்கப்பட்ட இந்துக்களை பட்டதாரிகளாக மாற்றினார்.  படித்த அந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வெற்றி பெற்றதும் திராவிட இயக்கம்தான்.

இன்றைக்கும் இம்மக்களுக்கு – மறுக்கப்படும் மருத்துவக் கல்விக்கு பின்னால் இருக்கும் நீட் தேர்வு தொடங்கி, தற்போது மறுக்கப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வரை சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இயக்கம் தி.மு.க. மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் மண்டல் பரிந்துரைகளை அமலாக்கப் பாடுபட்டது தி.மு.க.  அருந்ததியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கியதோடு, 2000 ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு, சூத்திரர்களாக பஞ்சமர்களாக ஆக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டது தி.மு.க.

‘இந்து’ என்றழைக்கப்படும் மக்களில் 95% சதவீதமாகவுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைக்கோரி தி.மு.க போராடியபோதெல்லாம் அவற்றை எதிர்த்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? இல்லையே!  அதை செய்தவர்கள் பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்த முன்னேறிய சாதியை சார்ந்த இந்துக்களும்தான்.  வேறு மொழியில் சொன்னால், பாஜகவும் அதன் பரிவாரங்களுமே இன்றுவரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன. எனவே, தி.மு.க இந்து விரோத கட்சியல்ல.  யார் ‘இந்து’ என்பதில் பிரச்சனை இருக்கிறது. 

‘இந்து’ என்று தங்களை ஏற்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கும், அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள வரையறைகளும், வரம்புகளும், கடமைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்புடையதா என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு.  அதனால்தான், பேரறிஞர் அண்ணா அவர்களே ‘இந்து’ எனும் அடையாளத்தை ஏற்க மறுத்தார்.  இந்த கருத்துப் போராட்டம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1916-ல் வெளிவந்த பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வந்ததில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  அந்த கருத்துப் போராட்டத்தில் நாங்கள் எப்போதும் தோற்றதில்லை.  தி.மு.க.வின்அரசியல்-சமூகப்பார்வைதமிழர்களைஇனத்தால், மொழியால்இனணப்பதேயன்றி;மதத்தால்,சாதியால்பிரிப்பதல்ல!.image

 தேர்தலுக்காகவேதி.மு.இந்துமக்களுக்குஆதரவாகஇருப்பதுபோல்வேஷம்போடுகிறதுஎன்கிறனரே?

எங்களுக்கு வேஷம் போடவேண்டிய அவசியமில்லை. மதத்தின் பெயரால் காலந்தோறும், கடவுளின் வடிவங்களையும், கருத்துகளையும் மாற்றிக்கொண்டே இருக்கும் ‘இந்துத்துவா’ கொள்கையை ஏற்றிருக்கும் பாஜகவுக்கும் அதன் பரிவாரங்களுக்கும்தான் இது பொருந்தும்.  இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களை 1971 தேர்தல் முதலே தி.மு.க சந்தித்து வந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அப்படிப்பட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழர்கள் மதத்தின் பெயரால் நடத்தப்படும் அரசியல் நகர்வை எப்போதும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. அண்மையில்கூட, இந்துக்களாக அறியப்படும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு கேட்டு தி.மு.க தொடுத்த வழக்கில், அவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது என்று உயர் நீதிமன்றத்திலேயே வாதிட்டுவிட்டு “இந்துக்களின் பாதுகாவலன்”  என்று கூச்ச நாச்சமின்றி பாஜக எழுப்பும் வெற்று கோஷம்தான் மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறதே தவிர; தி.மு.க அல்ல.  இந்துக்கள் என்றழைக்கப்படும்-சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு (Socially and Educationally Backward) உரிமை கேட்டு அதற்காக அரசியல் சட்டத்தை முதன் முதலாக திருத்தியது திராவிட இயக்கம். அன்று தொடங்கி, மண்டல் கமிஷன் பரிந்துரை வரை நீண்டு, இன்று வரை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டை ஏற்க மறுக்கும் இவர்கள் இப்போது மதத்தால் அவர்களை உள்ளிழுக்க நினைக்கும் தந்திரம் இங்கு பலிக்காது.

ஆனால், இன்னமும்மு.க.ஸ்டாலின்இந்து மததிருமணம்குறித்துபேசியதுதானே சர்ச்சையில் இருக்கிறது?

இந்துமதத் திருமணத்தின்போது என்ன மந்திரம் சமஸ்கிருதத்தில் சொல்லப்படுகிறதோ அது குறித்துத்தான் அக்கருத்தை அவர் சொன்னார்.  அப்படி இல்லை என்று ஏன் எவரும் விளக்க மறுக்கிறார்கள். ஆரோக்கியமான உள் விவாதம் நடத்தி, காலத்திற்கேற்ப அப்படிப்பட்ட கருத்துக்களை மாற்றிக் கொள்ள மனமில்லா பழமைவாதிகள், உள்ளதைச் சொன்னால் ஏன் கோபிக்கிறார்கள் என்று புரியவில்லை. பெரியார் வலியுறுத்தி அண்ணா கொண்டு வந்த சுயமரியாதை திருமண சட்டத்தின் ஊற்றுக்கண்ணே சமஸ்கிருதத்தில் இருக்கும் இப்படிப்பட்ட ஒவ்வாமை மிக்க அருவருப்பான சுலோகங்களிலிருந்துதான் தொடங்கிற்று. இப்படிப்பட்ட பிரச்சாரங்களை எல்லாம் முறியடித்துத்தான் தி.மு.க. 39 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றுள்ளது என்பதை மறந்து விடவேண்டாம்.  தமிழக மக்களுக்கு நன்றாகவே காவி அரசியல் புரிந்திருக்கிறது.

பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்டது குறித்து தங்கள் கருத்து என்ன?

”பேராசிரியர் சுப.வீ. அவர்களின் இது குறித்த விமர்சனம்தான் நினைவுக்கு வருகிறது.  உயிரோடிருந்து ஊரெல்லாம் தன் கொள்கைகளை பரப்பியபோது, அவரின் தாடி உரோமத்தைக்கூட உரசிப்பார்க்க முடியாதவர்கள், அவர் மறைந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இப்படிப்பட்ட கையாலாகாத காரியத்தை செய்கின்றனர்.  பெரியார் இப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியங்களால் வீழ்ந்து விடமாட்டார்.  எந்த ஆதிக்கத்தையும் ஏற்காத பெரியார் எனும் நெருப்பை எவரும் பொட்டலங்கட்ட முடியாது.

 image

ஊரடங்குசூழல்எப்படிபோய்க்கொண்டிருக்கிறது?. 

நிறைய புத்தகங்களை வாசிக்க முடிகிறது.  சில நாட்கள் தொகுதியில் சுற்றுப் பயணம். குறிப்பாக, பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவர்களை நேரில் சந்தித்து பல்வேறு உதவிகள் வழங்கினேன்.  வாசித்த புத்தகங்களைக் கொண்டு சில கட்டுரைகளை எழுதினேன்.  நேரு நினைவு நாளையோட்டி அண்மையில் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் நான் எழுதிய கட்டுரையை படித்திருப்பீர்கள். என்றாலும், சுறுசுறுப்பும் பரபரப்பும் நிறைந்த  பொதுவாழ்வில் இந்த ஊரடங்கு முற்றிலும் புதிய அனுபவத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. கட்சியின் தலைவர்களை, வாக்களித்த மக்களை, நண்பர்களை சந்திக்க முடியாத நிலையில் மனம் கணக்கத்தான் செய்கிறது.

ஒருவருடம்மக்களவைஉறுப்பினராகதொகுதிக்கும்தமிழகத்திற்கும்என்னசெய்துள்ளீர்கள்?

நாடாளுமன்றத்தில் எனது பங்களிப்பை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். பாஜக அரசின் மதவாத அரசியலையும், மாநிலங்களின் உரிமைக்கு எதிரான போக்கையும் அவ்வப்போது கண்டித்து குரல் எழுப்பியுள்ளேன். தமிழகத்திற்கான திட்டங்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ளேன்.  இந்த ஓராண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10 மசோதாக்கள் மீதான விவாதத்தில் பங்கு கொண்டு தி.மு.க. சார்பில் என் கருத்தை முன்வைத்திருக்கிறேன். நிதிநிலை அறிக்கை, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து உரையாற்றியிருக்கிறேன். குறிப்பாக, கேள்வி நேரங்களில் கலந்துகொண்டு 93 கேள்விகள் மற்றும் துணைக் கேள்விகளை பல்வேறு பொருள் குறித்து எழுப்பியுள்ளேன்.  தொகுதி மக்களின் பிரச்சனைக்காக மட்டுமே 15 முறை பிரச்சனைகளை எழுப்பி அவையின் கவனத்திற்கும், அரசின் மேல் நடவடிக்கைக்கும் கொண்டு சென்றிருக்கிறேன்.  உலக வங்கியின் உதவியோடு மத்திய அரசால் 100 மாவட்டங்களில் அமைய இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக நீலகிரியையும் சேர்த்து, மருத்துவக் கல்லூரி அமைய வழிவகை செய்துள்ளேன்.  எனது நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நான் தேர்தல் நேரத்தில் கொடுத்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றியதில் முழு மனநிறைவு கொள்கிறேன்.

image

 தாயநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதிஉள்ளிட்டவர்கள்ஒடுக்கப்பட்டமக்களைத்தாக்கிப் பேசினார்களே?  இதில்,உங்கள்நிலைப்பாடுஎன்ன?

ஒடுக்கப்பட்ட மக்களை தாழ்த்தி பேசவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் பேசவில்லை. இருவரின் வார்த்தை பிரயோகங்களும் உள்நோக்கமற்றவையென்றும், அவை தவறான பொருளில் அர்த்தம்கொள்ளப்பட வேண்டியதல்ல என்றும், அவர்களே மறுப்பு தெரிவித்ததோடு, தவறியும் எவருடைய மனதும் புண்பட்டுவிடக்கூடாதெனும் உயர்ந்த மாண்போடும், பொறுப்புணர்ச்சியுடனும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள்.  எனவே, அரசியலுக்காக திரித்து பேசப்படுவதை ஏற்க முடியாது.

- வினி சர்பனா

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்