Published : 20,Jul 2020 05:10 PM
கொரோனா எதிரொலி : புகைப்பழக்கத்தை கைவிட்ட 41% பேர்..! ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் புகைப்பிடிப்பவர்களை அதிகம் பாதிக்கும் என்பதால் கடந்த 4 மாதங்களில் 41% பேர் புகைப்பழக்கத்தை கைவிட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகில் பெரும் அச்சுறுத்தலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸால் இறந்த லட்சக்கணக்கானோர்களில் பெரும்பாலானோர் நுரையீரல் மற்றும் சுவாச பாதிப்பு உடையவர்கள் தான். இதனால் புகைப்பிடிப்பவர்களை கொரோனா வைரஸ் தீவிரமாக பாதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதன் எதிரொலியாக கடந்த 4 மாதங்களில் உலகில் புகைப்பிடிப்பவர்களில் 41% பேர் அதனை குறைத்துள்ளதாக லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையில் இது மிகப்பெரிய மாற்றம் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனாவின் அச்சம் காரணமாக இவர்கள் புகைப்பழக்கத்தை கைவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை இதற்கான கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐரோப்பிய கண்டத்தில் கடந்த வருடம் 70 லட்சம் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் இருந்ததாகவும், தற்போது அதில் பெரும்பாலானோர்கள் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று லண்டனில் 2.4 மில்லியன் குடியிருப்பு வாசிகள் உள்ளதாகவும், இதில் புகைப்பிடிப்பவர்களே கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.