Published : 20,Jul 2020 04:56 PM
12 கி.மீ தேடிச் சென்று குற்றவாளியை காட்டிக் கொடுத்த மோப்ப நாய்

கடந்த ஜூலை 10-ஆம் தேதி, கர்நாடகா மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். குற்றவாளியை கண்டறிய 9 வயதான துங்கா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
துங்கா, சம்பவம் நடந்த இடத்திலிருந்து, இடையே எங்கும் நிற்காமல் 12 கி.மீ தூரத்தில் இருக்கும் தாவன்கேர் கிராமப் பகுதியில் உள்ள காஷிப்பூரில் ஒரு வீட்டின் முன்பு வந்து நின்றது. அந்த வீட்டில் மறைந்திருந்த சேத்தன் என்பவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் தான் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்.
கொலை செய்யப்பட்டவரின் பெயர் சந்திர நாயக் என்றும், ஜூலை 10ஆம் தேதி திருட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுக் கொன்றதாக அவர் கூறியுள்ளார்.
பொதுவாக பயிற்சியளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் நான்கு முதல் ஐந்து கி.மீ. தூரம்தான் ஓடும். ஆனால் துங்கா மோப்பநாய் 12 கி.மீ. ஓடி சேத்தன் தனது நண்பர்களுடன் பதுங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்துள்ளது.
துங்காவை வழிநடத்தும் போலீஸ் பிரகாஷ் இரவு 9.30 மணியளவில் குற்றம் நடந்த சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அங்கிருந்து மதுக்கடை, உணவு விடுதி என ஒவ்வொரு இடமாகச் சென்று நள்ளிரவு அவர்கள் பதுங்கியிருந்த வீட்டின் முன்பு துங்கா நின்றுள்ளது.அங்கு இருந்த சேத்தனை விசாரித்ததில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அந்த வீட்டிலிருந்து தப்பியோடிய அவரது நண்பர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளியை கண்டுபிடித்துக் கொடுத்த துங்காவிற்கு மாலை அணிவித்து போலீசார் பாராட்டினர்.